• September 2, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலுக்கு உடனடி சிகிச்சை தேவையா, அல்லது வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் தொந்தரவுகள் ஏற்படுவது என்பது இயல்பானதுதான். ஆனால், இவற்றின் பாதிப்பு எப்படி உள்ளது என்பதைப் பொறுத்தே உங்களுக்கான பதிலைச் சொல்ல முடியும்.

குழந்தைகளுக்கு வெறும் சளி மட்டுமே பிடித்திருக்கும் பட்சத்தில், நீராவி பிடிக்கச் செய்வது போன்ற எளிய கைவைத்தியங்களைப் பின்பற்றலாம்.  ஆனால், காய்ச்சலோடு சேர்ந்து சளியும் இருக்கிறது என்றால், அது வைரஸ் தொற்று அல்லது பாக்டீரியா தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.  காய்ச்சல் வந்துவிட்டாலே, அது தொற்றுக்கான அறிகுறி என்று அர்த்தம். காய்ச்சல் இருக்கும்போது மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது, அதுதான் பாதுகாப்பானதும்கூட.

குழந்தையின் வயதுக்கேற்ப இந்த அறிவுரை மாறும். உதாரணத்துக்கு, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சளி பிடித்தால், ஒன்றிரண்டு நாள்களில் தானாகச் சரியாகிறதா என காத்திருந்து பார்த்துவிட்டு, பிறகு மருத்துவ ஆலோசனை பெறலாம். அதுவே, பிறந்தது முதல் 9 மாதங்கள் வரையிலான குழந்தைக்கு சளி பிடித்தால் உடனே மருத்துவரிடம் காட்டுவதுதான் சரியானது.

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல்

தானாகச் சரியாகிவிடும் என அலட்சியம் செய்தால், அது வீஸிங் எனப்படும் மூச்சுத்திணறலாக மாறவும் வாய்ப்பு உண்டு.  அப்படி அலட்சியம் செய்தால் சில குழந்தைகளுக்கு  வைரல் பிராங்கியாலிட்டிஸ் (viral bronchiolitis) எனும் பாதிப்பாக மாறும் அபாயம் உண்டு. அதாவது சுவாசக் குழாய் சுருங்கி, ஆக்ஸிஜன் அளவு குறையவும் வாய்ப்பு உண்டு. அதுபோன்ற நிலைகளில் குழந்தைகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

இன்னும் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் காரணமாக ஃபிட்ஸ் வரவும் வாய்ப்பு உண்டு. எனவே, எப்படிப்பட்ட சளி, காய்ச்சல் என்பதைப் பொறுத்தே சிகிச்சை தீர்மானிக்கப்படும். நம்மூரில், லேசாக மூக்கில் நீர் வடிந்தாலும் சளி என்பார்கள்… இருமலையும் சளி என்பார்கள்… காதில் நீர் வடிந்தாலும் சளி என்பார்கள்.  எதையும் ஆரம்பத்தில் அலட்சியம் செய்துவிட்டு, அது முற்றிய பிறகு டாக்டரை நாடுவதற்கு பதில், ஆரம்பத்திலேயே பார்த்துவிடுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *