
சென்னை: அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் போலீஸார் ஏன் தாமதம் செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் என்.வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான அரசு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் போலீஸார் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடிக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதன்பேரில், வேலுமணி மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை என்று கூறி, புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.