• September 1, 2025
  • NewsEditor
  • 0

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ 675 கோடி செலவில் காவனூர் காமன்கோட்டை சிறுவயல், ஏ.மணக்குடி, கீழச்செல்வனூர், வேப்பங்குளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும் இந்த சோதனை கிணறுகளால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கபடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வானம் பார்த்த பூமியாக உள்ள ராமநாதபுரத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மாவட்டம் முழுமையும் பாலைவனமாக மாறும் சூழல் உருவாகும் என்பதால், மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், ”ஓ என் ஜி சி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்ததை தொடர்ந்து மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓ என் ஜி சி க்கு சுற்றுச்சுழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ள செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு
ஆய்வு பணிகளை தடுத்த விவசாய சங்க நிர்வாகிகள்

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவாகும். எனவே, தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் இத்திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்வதாக” கூறியிருந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் அளமனேந்தல் கிராமத்தில் உள்ள மாதவனூர் கண்மாய் அருகே, மத்திய அரசின் தாதுக்கள் மற்றும் தனிமங்கள் குறித்து கண்டறியும் நிறுவனமான M E C L ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை அறிந்த விவசாயிகள் காவிரி குண்டாறு வைகை ஆறுகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் எம்.ஏ.அர்ச்சுணன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆய்வு நிறுவனத்தினர் தங்கள் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. 3 லட்சம் ஏக்கர் நெல் விவசாயம் மற்றும் மிளகாய், பருத்தி விவசாயத்தினை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வினை பாதுகாக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *