
மே 2020-ல் கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி முதல்முறையாக சீனாவுக்கு சென்றார்.
சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டையொட்டி, சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி, “பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை இந்தியா முன்னெடுத்துச் செல்லும்.
2.8 பில்லியன் மக்களின் நலன் இந்தியா-சீனா ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இன்று பிரதமர் மோடி ஜி ஜின்பிங்கை சந்தித்ததை பின்வரும் பின்னணியில் மதிப்பிட வேண்டும்.
ஜூன் 2020-ல், கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீன ஆக்கிரமிப்பு, நமது துணிச்சலான 20 வீரர்களின் உயிர்களைக் காவு வாங்கியது.
இருப்பினும், சீன ஆக்கிரமிப்பை அடையாளம் காண்பதற்குப் பதிலாக, ஜூன் 19, 2020 அன்று, பிரதமர் மோடி சீனாவுக்கு ‘க்ளீன் சிட்’ கொடுத்தார்.
லடாக் எல்லையில் சீனாவுடனான நிலையை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என ராணுவத் தளபதி கோரியுள்ள நிலையிலும், அதை அடையத் தவறியபோதிலும், மோடி அரசு சீனாவுடன் சமரசத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
அதன் மூலம் அதன் ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்குகிறது. யார்லுங் சாங்போ நதியில் சீனா ஒரு பிரமாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது.
இது நமது வடகிழக்குப் பகுதிகளுக்கு மிகக் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் மோடி அரசு இந்த விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

சீனாவிலிருந்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இறக்குமதிகள் குவிந்து வருவது நமது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) தொடர்ந்து அழித்து வருகிறது.
பிற நாடுகளைப் போலல்லாமல், சீன இறக்குமதியாளர்களுக்கு நாம் பெரும்பாலும் தடையற்ற சுதந்திரம் அளித்துள்ளோம்.
சீன ஆக்கிரமிப்பு, அதன் திமிர்த்தனம், நமது அரசின் பலவீனம் ஆகியவற்றால் ‘புதிய இயல்புநிலை’ வரையறுக்கப்பட வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.