
இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த 2008-ல், மும்பை vs பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஐ.பி.எல் போட்டியில் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்த செயல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்துக்குப் பிறகு 11 போட்டிகளில் ஆட ஹர்பஜன் தடைவிதிக்கப்பட்டார்.
மறுபக்கம், ஹர்பஜன் இன்று வரை பல இடங்களில், தான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்றும் அது முழுக்க முழுக்க தன்னுடைய தவறு என்றும் மன்னிப்பு கேட்டு வருகிறார்.
இவ்வாறு அந்த சம்பவத்தை இரு தரப்பினரும் கடந்து சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஸ்ரீசாந்த்தை ஹர்பஜன் அறையும் வீடியோ 17 வருடங்களுக்குப் பிறகு இப்போது வெளியாகி சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கின் `Beyond23 Cricket Podcast’ என்ற நிகழ்ச்சியில் ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி கலந்து கொண்டபோது இந்த வீடியோ அதில் ஒளிபரப்பட்டிருக்கிறது.
இதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய ஸ்ரீசாந்த்தின் மனைவி புவனேஸ்வரி, “லலித் மோடி, மைக்கேல் கிளார்க் இருவரும் வெட்கப்பட வேண்டும்.
உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? பழைய காயங்களை மீண்டும் கிளறிவிடுகிறீர்கள்.
ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்த் இருவருக்குமே இப்போது பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். நீங்கள் செய்தது அருவருப்பான, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்” என்று விமர்சித்தார்.

இந்த நிலையில், இன்ஸ்டன்ட் பாலிவுட் ஊடகத்திடம் வீடியோ வெளியானது குறித்து பேசியிருக்கும் ஹர்பஜன், “வீடியோ வெளியான விதம் தவறானது. இது நடந்திருக்கக் கூடாது.
இதற்குப் பின்னால் அவர்கள் சுயநல நோக்கம் கொண்டிருக்கலாம். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்றை மக்கள் மறந்துவிட்டார்கள்.
அதை மக்களுக்கு அவர்கள் நினைவூட்டுகிறார்கள். என்ன நடந்ததோ அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
இப்போது வீடியோ வைரலாகிவிட்டது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.
தவறு செய்துவிட்டேன் என பலமுறை நான் கூறிவிட்டேன். மனிதர்கள் தவறு செய்கிறார்கள், அதில் நானும் தவறு செய்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.