
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. அதில், பின்வரும் வைகுண்ட சுவாமிகளின் கூற்றில் சரியானவற்றை தேர்வுசெய்க என கேட்கப்பட்ட கேள்விக்காக 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் முதல் விடையில் முடிசூடும் பெருமாள் என்றும் முத்துக்குட்டி என்றும் அழைக்கப்பட்டார் என கொடுக்கப்பட்டிருந்தது. அதே கேள்வி ஆங்கிலத்தில் கேட்கப்பட்டது. அதற்கான விடையில் முடிசூடும் பெருமாள் என்பதை ஆங்கிலத்தில் “the god of hair cutting” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை முடிவெட்டும் கடவுள் என்ற ரீதியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்கு பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு அய்யாவழி பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கேள்வி இதயத்தை நொறுக்கும் வகையில் அமைந்துள்ளதாக அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாதிபதி அடிகளார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாதிபதி அடிகளார் கூறுகையில், “அந்த கேள்வியில் மொழிபெயர்ப்பில் மட்டும் அல்ல கேள்வி கேட்டதே தவறானது. அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியில் ஒரு சரியான பதிலும், அதன்பிறகு தவறான பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அது அய்யா வைகுண்டரை அவமானப்படுத்தும் விதமானது. இதனால் எங்கள் இதயமே நொறுங்கும் அளவுக்கு வேதனையாக உள்ளது. அய்யாவைப்பற்றி வேறு எதாவது நல்லபடியான கேள்வியாக கேட்டிருக்கலாம். தேச தலைவர்களையும், கடவுளையும் பற்றி நல்ல பிறப்பா கெட்டப்பிறப்பா என்ற வகையில் கேள்வி அமைவது தவறானது. தமிழ்நாட்டில் அய்யா வைகுண்டருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டதே. இதற்காகவா நாங்கள் கேரளாவில் இருந்து போராடி தமிழ்நாட்டுடன் சேர்ந்தோம். எங்கள் நம்பிக்கை தளர்ந்துபோகிறது.

கேரள மாநில பாடபுத்தகத்தில் அய்யா வைகுண்டர் வரலாறு குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. கேரள மாநில தேர்வாணையத்தில் இதுபோன்ற அவலமான கேள்விகள் கேட்கப்படவில்லை. அய்யா வைகுண்டர் கேரள மறுமலர்ச்சியின் பிதாமகன் என கேரள முதல்வர் கூறி பெருமைப்படுத்துகிறார். அப்படிப்பட்டவர் குறித்து தமிழகத்தில் உதாசீனமாக, மிக மலினமாக ஒரு அரசு கவனக்குறைவாக இருப்பது வேதனையாக உள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் அய்யா வைகுண்டர் குறித்த பாடத்திட்டம் இருந்தால் இதுபோன்ற தவறு ஏற்பட்டிருக்காது. தமிழுக்காக பாடுபட்டவர் அய்யா வைகுண்டர், அவரது திருநிழல்தாங்கலில் தமிழில் வழிபாடு நடக்கிறது. அப்படிப்பட்ட வைகுண்டரை பெருமைப்படுத்த தமிழக அரசு தயங்குகிறதா? தமிழ்நாட்டில் அதிகாரிகளுடைய ஆட்சி நடக்கிறதா, தமிழர்களின் ஆட்சி நடக்கிறதா என்பதே தெரியவில்லை. அறியாமையான அதிகாரத்தின் கீழ் நாம் இருக்கிறோமே என்று வருத்தப்படுகிறோம்” என்றார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அகில உலக அய்யவழி சேவை அமைப்பின் செயலாளர் கிருஷ்ணமணி அப்புக்குட்டி கூறுகையில், “டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான கேள்வியில் அய்யா வைகுண்டர் பற்றி கேட்கப்பட்ட கேள்வி இரண்டு வகையில் அய்யாவழி மக்களை களங்கப்படுத்துகிறது. ஒன்று ஆங்கிலத்தில் தவறான அர்த்தத்தில் மொழிபெயர்த்தது முதல் தவறு. அதுகூட மன்னிக்கக்கூடிய தவறு எனக் கூறலாம். அய்யா வைகுண்டர் ‘முடிசூடும் பெருமாள் என்றும் முத்துக்குட்டி என்றும் அழைக்கப்பட்டார்’ என விடைப்பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது அகிலத்திரட்டு என்ற புனித நூலுக்கு எதிரான, மன்னிக்க முடியாத தவறு” என்றார்.