
சென்னையில் விஷப் பூச்சி கடித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சர்மிளா (19).
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29ம் தேதி) காலை, சர்மிளா தூங்கி எழுந்தபோது அவரது உடல் முழுவதும் திடீரென அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அரிப்பு ஏற்பட்ட இடங்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக வீட்டிலிருந்த மஞ்சளை உடல் முழுவதும் பூசிக்கொண்டு குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்திருக்கிறார். இதனால் பதறிய அவரின் குடும்பத்தார், அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருவேற்காட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஒரு நாள் முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அங்கும் சிகிச்சை பலனின்றி சர்மிளா மரணமடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சர்மிளாவின் தந்தை சங்கருக்கும் ஏற்கெனவே இதேபோன்று விஷப் பூச்சி கடித்து அரிப்பு ஏற்பட்டு வீக்கம் வந்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல சர்மிளாவையும் விஷப் பூச்சி ஏதேனும் கடித்து, அதனால் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.