
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2000 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் மருத்துவமனையில் 1200 படுக்கையுடன் செயல்படும் உள் நோயாளிகள் பிரிவில் ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த மருத்துவமனையில் இதற்கு முன் உள்ள ஒப்பந்தத்தின் படி 378 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். ஆனால் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதனால் 132 தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
இதன் பின்பு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொடர்ச்சியான பணிச்சுமையினால் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலையை விட்டு வெளியேறி வருகின்றனர். தற்போது 118 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இந்நிலையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க மூன்று மாதங்களாக தொடர்ந்து கால தாமதம் செய்து வருவதால் பணிச்சுமை அதிகமாகி ஊழியர்கள் பலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளனர்.

கூடுதல் பணியாளர்கள் நியமிக்கவும், ஊதிய உயர்வு வழங்க கோரியும் தொழிலாளர்கள் இன்று வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் அன்புவேல் ஆகியோர் ஒப்பந்த பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினர்.