
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
2013..
எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது? மனதில் இரண்டு கல்லூரிகளை முன்னிலையில் வைத்திருந்தேன்.
விவரம் தெரிந்து முதல் முறை சென்னைக்குப் பயணிக்கிறேன் பொறியியல் கலந்தாய்விற்காக.
சென்னையில் இறங்கியதில் இருந்து சென்னை எனக்கு வியப்பையே தந்து கொண்டிருந்தது.
‘ரோடுலாம் எப்படி இருக்கு.. எத்தனை பாலம் இருக்கு.. கட்டிடம்லாம் எவ்ளோ உயர உயரமா இருக்கு.. அதோ அங்க விமானம் பறக்கிறது இவ்ளோ கிட்ட தெரியுது..’ இப்படி பல ஆச்சர்யங்கள் தந்தது சென்னை எனக்கு.
கல்லூரியைத் தேர்ந்தெடுத்து ஆயிற்று. உள்ளூரில் இருக்கும் கல்லூரியைத் தான் தேர்வு செய்தேன் எனினும் கல்லூரி வாழ்க்கையைப் பற்றிய பெருங்கனவைத் தந்ததும் சென்னை தான்.
“உடனே ஏன் கிளம்புறீங்க.. ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.. அப்புறம் எங்க ஊரு பீச்லாம் எப்போ பாப்பிங்க” சென்னையில் இருந்த உறவினரின் அன்பு வேண்டுதலில் இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கினோம்.
மெரினா கடற்கரை..
எப்படி கடல் அலையின் ஆர்ப்பரிக்கும் சத்தத்திலும் மனம் இவ்வளவு அமைதியுறுகிறது.
கால் நனைக்க ஓடிச் சென்றேன். ஈரம் பட்ட காலால் உடலே சிலிர்த்துப் போனது.
காலில் ஒட்டிய மண்ணோடு கடல் அலையைக் கண் கொட்டப் பார்த்தேன்.
சுற்றியுள்ள மக்கள் முகங்களில் சந்தோசம் நிரம்பி இருந்தது. எங்கும் கொண்டாட்ட மனநிலை. சென்னையின் நினைவுகளாய் பலவற்றைத் தந்து சென்றது மெரினா.
அடுத்த நாள் அத்தையின் வேண்டுகோளுக்காக அம்மா சுடிதார் அணிந்து கொண்டார். இது நாள் வரை புடவையிலேயே பார்த்த என் அம்மாவை சுடிதாரில் பார்க்க வைத்தது சென்னை.
திநகர்..
இத்தனை கடைகளா.. எங்கள் ஊரிலும் கடை வீதிகளுக்குச் சென்றுள்ளேன். ஆனால் இவ்வளவு கூட்டத்தை இத்தனை கடைகளை இங்கு தான் கண்டேன்.
மெரினாவில் இருந்த கொண்டாட்ட மனநிலை இங்கு இல்லை. சாலையோர கடைகள் பல இருந்தன. பரபரப்பாக இருந்தது சூழல்.
அடுத்த நாள் அருங்காட்சியகம், கோவில்கள், எம்.ஜி. ஆர் அவர்களின் நினைவு இல்லம் மற்றும் சில முக்கியமான வரலாற்று இடங்களுக்குச் சென்றோம்.
சென்னையின் மேல் எப்பொழுதுமே ஒரு வியப்பு இருக்கும். இப்பொழுது சாதிக்கும் பலர் முதன் முதலில் கல்லூரிக்குச் சென்றது சென்னை கல்லூரிகளில் தானே. இந்த மண்ணில் பல அறிஞர்கள், தலைவர்கள், கலைத் துறையினர்களின் கால் பதிந்துள்ளதே. இன்னும் வரலாற்றைப் பின் நோக்கினால் தமிழ்நாடு என்பதை விட மதராஸ் என்று தான் நம்மை பல மாநிலங்களும் வெளிநாட்டவர்களும் அடையாளமாக நினைக்கிறார்கள். நம் அடையாளம் அல்லவா நம் தலை நகரம் சென்னை.
2015..
கல்லூரியின் படித்துக்கொண்டிருக்கும் பொழுது தோழிகளுடன் சேர்ந்து சென்னைக் கிளம்பினோம்.
ஐ. ஐ. டி. மெட்ராஸ் கல்லூரியில் ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பில் மீண்டும் அழைத்தது சென்னை.
எங்களின் சுய ஏற்பாடுகளில் நாங்களே கிளம்பி எங்கள் பத்து பேரின் திட்டங்களில் சென்னைக்கு வந்தோம்.
அதிகாலை நான்கு மணிக்குச் சென்னையில் வந்து இறங்கினோம்.
“இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.. அதுக்குள்ள பீச் போய்ட்டு சன் ரைஸ் பாக்கலாமா?” தோழி ஒருத்தி ஆர்வமாய் கேட்டாள்.
அதற்கு எல்லோரும் சம்மதிக்க பேருந்தில் ஏறி கடற்கரைக்குச் சென்றோம்.
ஊருக்கு ஊர் உள்ளூர் பேருந்துகளும் வித்தியாசப் படுகின்றன. பெண்களுக்கென முன் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்தக் காலையிலும் பேருந்து நிரம்பி தான் இருந்தது.
ஐந்தரை மணிக்கு கடல் முன்பு அமர்ந்து சூரியனுக்காகக் காத்திருந்தோம்.
இது அமைதியான சூரிய உதயம் அல்ல. தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டும் உற்சாகமாய் இரசித்த சூரிய உதயம்.
இந்த அதிகாலையிலேயே எத்தனை பேர் நடைபயணம் செய்கின்றனர் உடற்பயிற்சி செய்கின்றனர்.
ஐ.ஐ.டி மெட்ராஸ் கல்லூரி வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் போல் இருந்தன. கருத்தரங்கம் முடித்துவிட்டு மாலையில் பீனிக்ஸ் மால் சென்றோம்.
எதற்காக அத்தனை முறை ஏறி இறங்கினோம் தெரியவில்லை. தோழிகளுடன் அங்கும் இங்கும் உலா வந்தோம். மாலின் உள்ளே உள்ள திரையறங்கில் திரைப்படம் பார்த்தோம். கொண்டாட்ட மனநிலையில் உற்சாகமாய் இருந்தோம். நம் ஊரில் இல்லாத ஒரு தனி உற்சாகம் அது.
தோழிகளுடன் அடுத்த நாள் தீம் பார்க் ஒன்றிற்கு சென்றோம்.
ஊரில் திருவிழா சமயங்களில் மேள சத்தம் கேட்கும் பொழுது ஆண் தோழர்கள் ஆடும் பொழுது உள்ளுக்குள் பொறாமையாக இருக்கும். (இந்த வருட திருவிழாவில் பெண்கள் குழுவும் இணைந்து விட்டார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன்). பெரிதாக ஆடத் தெரியாது என்றாலும் இசையில் துள்ளி குதிக்க தோன்றும். ஆனால் நாம் பெண்கள் அப்படி இருக்கக்கூடாது அப்படி ஆடக் கூடாது என மனம் தடுக்கும்.
ஆனால் இங்கே ஆடுவதற்கென்றே ரெயின் டான்ஸ் இருந்தது. வயது வித்தியாசமின்றி எல்லா வயதுடைய பெண்களும் உற்சாகமாய் ஆடினார்கள். அதைப் பார்த்து வியந்து நின்றேன்.
ஓடிச் சென்றேன். முதலில் நனைந்தேன். பாடல்களை உள் வாங்கினேன். தோழிகள் ஆடத் தொடங்கினார்கள். முதல் அடி எடுத்து வைக்க கூச்சமாக இருந்தது. யாரைப்பற்றியும் யோசிக்கவில்லை. நான் நானாக மட்டும் துள்ளி குதிக்க ஆசைப்பட்டேன்.
பர்ஸ்ட் ஸ்டெப் போட்டாயிற்று. அவ்வளவு தான் தோழிகளுடன் இணைந்து ஆடிப் பாடி கைகோர்த்து சுற்றி வந்து துள்ளி குதித்து மகிழ்ச்சியில் நனைந்தோம்.

2017..
கல்லூரி முடித்த வருடம் போட்டித் தேர்வு எழுதுவதற்காகத் தனியாகச் சென்னை கிளம்பினேன். முந்தைய இரண்டு பயணங்கள் போல் இது கொண்டாட்டமாக அமையவில்லை. இந்த முறை வாழ்க்கையின் அடுத்தப் படியில் ஏற முயற்சிக்கும் தேடுதல் பயணம்.
தனியாகச் சென்னை வந்து இறங்கினேன். பெரியம்மா பையன் சென்னையில் வேலையில் இருக்க அவனின் துணையோடு பெருங்களத்தூரில் இருக்கும் பி.ஜி ஒன்றில் இரண்டு நாட்கள் தங்கினேன்.
பெரிதாகப் பயிற்சி செய்யாமல் சென்றதில் போட்டித் தேர்வை சரியாக எழுதவில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற யோசனையில் மனம் கனத்தது.
வெளியில் வந்தேன். ஹோட்டலுக்குள் நுழைந்தேன். தனியாக ஒரு பெண் சாப்பிட வருகிறாள் என்பதாய் யாரும் என்னைப் பார்க்க வில்லை. இங்கே அது இயல்பு. பல பெண்கள் தனியாக சாப்பிட்டு கொண்டுதான் இருந்தனர். ஆனால் எனக்கு இது தான் முதல் முறை. பசிக்காக நான் மட்டும் தனியாக உணவகத்திற்கு வந்து உணவு உண்டேன்.
சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தேன். டாக்ஸி பதிவு செய்து பி. ஜி வந்து சேர்ந்தேன்.
“நாளைக்கு ஒரு இன்டெர்வியூ இருக்கு.. அட்டென்ட் பண்ணிப் பாரு.. ஓகேனா ஒரு வருஷம் ஒர்க் பண்ணிட்டே கூட எக்ஸாம்கு படி” என்றான் அண்ணன்.
எனக்குத் தெளிவான முடிவு எதுவும் தோன்றவில்லை.
அடுத்த நாள் மெட்ரோவில் இன்டெர்வியூவிற்குக் கிளிம்பினோம். முதல் முறை மெட்ரோ ட்ரெயினில் பயணம். அண்ணனும் உடன் வந்தான். பிரமிப்புடன் பயணித்தேன்.
கம்பெனிவரை என்னுடன் வந்தவன் வெளியில் என்னை விட்டுவிட்டுச் சென்றான்.
அதுவரை உடன் இருந்த அண்ணன் தந்த தைரியத்திலும் மெட்ரோவில் வந்த சந்தோஷத்திலும் இருந்த நான் இன்டெர்வியூ என்றதும் படபடப்பானேன்.
முதல் இரண்டு சுற்றுகள் தேறிவிட்டேன். மூன்றாவது சுற்றில் கோடிங் (coding) எழுதச் சொன்னார்கள். கல்லூரி முடித்து ஆறு மாதங்களாக ப்ரோக்ராம் பயிற்சி செய்யாததால் மிகவும் தடுமாறினேன்.
மின்னஞ்சலில் முடிவுகளை சொல்வதாகக் கூறினார்கள். ஆனால் என்னுடைய ரிசல்ட் எனக்கே தெரியும். இது நிச்சியம் கை கூடாது. அப்படியே ஒருவேளை தேர்ச்சி பெற்றாலும் இந்தத் துறையில் தொடர்ந்து என்னால் இருக்க முடியமா தெரியவில்லை.
குரோம்பேட்டில் இருந்து பெருங்களத்தூர் செல்ல வேண்டிய நான் எதிர் திசையில் வந்த பீச் செல்லும் ட்ரெயினில் ஏறினேன். கடைசி நிறுத்தம் வரை சென்றேன். நடை மேடையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். நம் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்கிற யோசனையில் துக்கம் எழுந்தது. தண்ணீரைக் குடிக்க பாட்டிலைத் தேடினேன். இன்னும் ஒரு நிமிடத்திற்குள் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் துக்கம் கரைந்து கண்ணீராய் சிந்த நேரும்.

குடிக்க முயன்றேன் முடியவில்லை துக்கம் வென்றது. கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. இப்படி பொதுவெளியில் அமர்ந்து ஒரு பெண் அழுவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் அப்படியெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. அழுதேன். தொண்டையை அடைக்கும் துக்கம் வெளிவரும் வரை அழுதேன். யாராவது என்னைப் பார்த்தார்களா தெரியவில்லை. நான் யாரையும் பார்க்கவில்லை. சற்று நேரத்தில் மனம் தேறியது. கண்களைத் துடைத்தேன்.
சென்னை பீச்சில் இருந்து பெருங்களத்தூர் செல்லும் ரயிலில் ஏறினேன். மனதின் பாரம் சற்று குறைந்து இருந்தது. சுற்றியிருந்தவர்களைக் கவனித்தேன்.
வேலைக்குச் செல்லும் பெண்களின் நடை உடை பாவனைகளை கண்டு ரசித்தேன். பள்ளி கல்லூரி சென்று திரும்புபவர்களும் இரயிலில் பயணித்தார்கள். சிறு சிறு வியாபாரிகள் பொருட்களை விற்றுக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். எனக்கு எதிர் இருக்கையில் இருந்த பூக்கார அக்கா பயண நேரத்தில் கூட பூ கட்டிக் கொண்டே வந்தார்.
நான் யாருடனும் பேசவில்லை ஆனாலும் தானாய் ஏதோ ஒரு தெளிவு தோன்றியது. மனம் இளகியது.
‘என்ன ஆயிடுச்சு இப்போ கல்லூரி முடித்து சில மாதங்கள் தானே ஆகின்றது. போட்டித் தேர்வு தானே எழுத ஆசைப்பட்டோம். பயிற்சி இல்லாமல் தேர்வு எழுதியதால் இந்த முறை தேர்வு கடினமாக இருந்தது. நன்கு படித்து பயிற்சி செய்து எழுதினால் பிடித்த வேலைக்கே செல்லலாமே. முயற்சி செய்து பார்ப்போம். இப்பொழுது தானே கல்லூரி முடித்துள்ளோம். ஒன்றிரண்டு வருடங்கள் இதெற்கென மட்டும் முயற்சித்துப் பார்ப்போம்’ என்றது மனம்.
2025…
கையில் மகளுடன் கடற்கரையில் நின்று கொண்டிருந்தேன். மகளை கடற்கரையில் கால் நனைக்க வைத்தேன். ஈரம் பட்டதும் விழித்தாள். மணல் காலில் ஒட்டுவதில் பயந்தாள். தூக்கச் சொல்லி கைத் தூக்கினாள். வேண்டாம் போகலாம் என்று கூறும் விதமாய் வந்த பாதையில் கை நீட்டினாள். அவளுக்குக் கடற்கரை பிடிக்கவில்லை. அவளுடைய ஒரு வயதில் முதல் முறையாக கடலைப் பார்க்கிறாள். மீண்டும் சென்னை வரும் பொழுது பயமில்லாமல் கடலுடன் பழகிக் கொள்வாள்.
அவள் பார்த்து பயந்த கடலைத் திரும்பிப் பார்த்தேன். எவ்வளவு தைரியம் கொடுத்திருக்கும் இந்தக் கடல். இன்று வேலையுடனும் குடும்பத்துடனும் மீண்டும் கடலைத் தொட்டுச் செல்வதில் என்னே ஆனந்தம்.
தூரத்தில் இருந்து சென்னையை இரசிக்கும் காதலியாக மீண்டும் ஊருக்குச் கிளம்பினோம் சென்னை தந்த கதகதப்புடன்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!