
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபின் (42). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
சுபின் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் மது குடிக்கச் சென்றிருக்கிறார். பூட்டிக்கிடந்த ஒரு கடை அருகே மது குடிப்பதற்காக அமர்ந்துள்ளனர்.
அப்போது நண்பர்கள் யார் அதிக மது குடிப்பார்கள் பார்க்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து நண்பர்கள் மதுக் குடிக்கும் போட்டி வைத்துள்ளனர். அதன்படி ஒரு ஃபுல் பாட்டில் மதுவை தண்ணீர் கலக்காமல் ராவாகக் குடித்துவிட்டு, தள்ளாடாமல் நிற்க வேண்டும் என்பதுதான் போட்டி.
அந்தப் போட்டியில் கலந்துகொண்ட சுபின் ஒரு ஃபுல் பாட்டில் மதுவை தண்ணீர் சேர்க்காமல் ராவாகக் குடித்திருக்கிறார். அதன்பின்னர் அவரால் தள்ளாடாமல் நிற்க முடியவில்லை. மது குடித்த சிறிது நேரத்தில் ஒரு கடைத்திண்ணையில் மயங்கிக் கிடந்தார்.
ஃபுல் பாட்டில் மது குடித்த சுபினுக்கு மயக்கம் தெளியும் என நண்பர்கள் சிறிதுநேரம் காத்திருந்தனர். இரவு வெகுநேரமாகியும் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. பேச்சு மூச்சற்று கடைத்திண்ணையில் கிடந்த சுபினைத் தட்டி எழுப்ப முயன்றனர் நண்பர்கள்.
ஒருகட்டத்தில் சுபினிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இதையடுத்து சுபின் இறந்துவிட்டதாகக் கருதினர் நண்பர்கள். ஏற்கனவே போதையிலிருந்த சக நண்பர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தனர். சுபினிடம் மதுக்குடிக்கும் போட்டி வைத்தவர்களுக்குப் பிரச்னை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சினர்.

பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக என்ன செய்யலாம் என யோசித்த நண்பர் ஒருவர், குளச்சல் போலீஸுக்கு போன் செய்து, கடைத்திண்ணையில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது சுபினின் உடலில் அசைவு தெரிந்தது. உடனே போலீஸார் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து சுபினை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.