• September 1, 2025
  • NewsEditor
  • 0

`ஒரு பெண் எம்.எல்.ஏ அவர்களின் கன்ட்ரோலுக்கு வரவில்லை என்றால், அவர்களுக்கு எந்த எல்லைக்கும் சென்று டார்ச்சர் கொடுக்கிறார்கள். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஒரு ஆண் எம்.எல்.ஏ-வை இப்படி எல்லாம் டார்ச்சர் செய்வீர்களா?’ என்று புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர், காரைக்கால் நெடுங்காடு தொகுதியின் பெண் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா. இவர் இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக வெளியிட்டிருக்கும் வீடியோ புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

சந்திர பிரியங்கா

அந்த வீடியோவில், “பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அதையும் மீறி, ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் நீதிமன்றத்திலிருந்து எனக்குச் சம்மன் வந்தது.

அதில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தது தொடர்பாக எஸ்.எஸ்.பி, எஸ்.பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, கொம்யூன் ஆணையர் போன்றவர்களுடன், அந்த பேனரில் எனது படம் இருந்ததால் நானும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதுகுறித்து நான் விசாரித்தபோது, குடும்பம் நடத்தவே கஷ்டப்படும் ஒருவர் இவ்வளவு செலவு செய்து வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன் இதற்குப் பின்புலமாக அமைச்சர் இருக்கிறார் என்று தெரிய வந்தது. நான் அமைச்சராக இருந்தபோதே ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறேன். அதனால்தான் இதெல்லாம் வேண்டாம், நம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வோம் என ஒதுங்கிக் கொண்டு வருகிறேன்.

ஆனால் நாம் ஒதுங்கிய பிறகும் அவர்களின் கன்ட்ரோலில் வரவில்லை என்பதற்காக, ஒரு பெண்ணுக்கு எவ்வளவு டார்ச்சர் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். நானும் சமீபகாலமாகப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். ஆனால் டார்ச்சர் எல்லையை மீறிப் போய்க்கொண்டு இருக்கிறது.

நாம் அரசியல்வாதி. அரசியலுக்கு வரும்போதே, எதையும் துணிச்சலாகச் சந்திக்க வேண்டும் என்று எனது தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். அதனால் நம்மை டார்ச்சர் செய்யலாம். ஆனால் அது நம்முடன் பயணிப்பவர்களைப் பாதிக்கக் கூடாது. அவர்களை நாம்தான் பாதுகாக்க வேண்டும். அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு.

நான் அமைச்சராக இருந்தபோது எனக்கு எவ்வளவோ பிரச்னைகள் தந்தார்கள். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாசுக்காக வெளியே வந்துவிட்டோம். இன்றைக்கும் அந்த அமைச்சர்கள் டார்ச்சர் செய்கிறார்கள். நான் அனைவரையும் சொல்லவில்லை. ஒன்றிரண்டு அமைச்சர்கள்தான் அப்படிச் செய்கிறார்கள்.

இதனால், ஒன்றும் ஆகப்போவது இல்லை. தேவையில்லாத அலைச்சல்தான் மிச்சம். அதாவது நம்மை டார்ச்சர் செய்கிறார்களாமாம். இதில் என்னுடைய வருத்தமெல்லாம், ஒரு ஏழைக் குடும்பத்தை இதில் எதற்குக் கொண்டு வருகிறீர்கள் என்பதுதான். அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு எவ்வளவு வேலைகள் இருக்கும்? அமைச்சர் பதவி என்பது சாதாரணமானது அல்ல.

முதலில் எம்.எல்.ஏ என்பதே சாதாரண விஷயமல்ல. எவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வெற்றி பெறுகிறோம்? அப்படி வெற்றி பெறும் ஒரு பெண் எம்.எல்.ஏ அவர்களின் கண்ட்ரோலுக்கு வரவில்லை என்றால், அவர்களுக்கு எந்த எல்லைக்கும் சென்று டார்ச்சர் கொடுக்கிறார்கள்.

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஒரு ஆண் எம்.எல்.ஏ-வை இப்படி எல்லாம் டார்ச்சர் செய்வீர்களா? சம்மன் ஒரு விஷயமே அல்ல. அதை நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம். ஆனால் நீங்கள் அதை ஒரு வேலையா எடுத்துக்கிட்டு செய்கிறீர்கள் என்றால், எவ்வளவு ஃப்ரீயா இருக்கிறீர்கள் ? மக்களைப் பற்றி நீங்கள் யோசிப்பதே கிடையாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

உங்கள் தொகுதிக்குப் போய் கேட்கும் போதுதான் தெரிகிறது, அங்கு ஏராளமான பிரச்னைகள் இருப்பது. அதைச் சரி செய்ய உங்களுக்கு நேரமில்லை. ஆனால் இதைப்பற்றியெல்லாம் பேசுவதற்கு நேரமிருக்கிறது. ஏனென்றால் ஒரு பெண் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்துவிடக்கூடாது.

அய்யய்யோ அரசியலே வேண்டாம்பா என்ற நினைக்கும்படி அவர்களை அசிங்கப்படுத்துகிறீர்கள். இதெல்லாம் ஒரு அரசியல்? இப்படியான அரசியலை என் அப்பா எனக்குக் கற்றுத்தரவில்லை. இப்போது கூட இந்த வீடியோ எதற்கென்றால், `நாம் அனைத்தையும் செய்துவிட்டோம். நாம் செய்வது எதுவும் யாருக்கும் தெரியாது’ என உங்களுக்கு ஒரு எண்ணம் இருக்கும் அல்லவா? ஆனால் நீங்கள் செய்வது அனைவருக்குமே தெரியும். ஆனாலும் ஒரே ஒரு விஷயத்திற்காக உங்கள் பெயரைச் சொல்லாமல் இருக்கிறேன்.

அது நம் முதல்வர் அய்யாவுக்காகத்தான். அவருக்காகத்தான் உங்கள் பெயரைச் சொல்லாமல் இருக்கிறேன். எனது அப்பா ஸ்தானத்தில் இருக்கும் அவருக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்.

பாவம் அவரே நிறைய விஷயங்களைப் பொறுத்துக் கொண்டுதான் போய்க் கொண்டிருக்கிறார். அவர்தான் `நீ தேர்தல் வேலையைப் பாரு. எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதே’ என்றார். நீங்கள் என்னை டார்ச்சர் செய்யும் விஷயம், எனக்குத் தெரியும்னு உங்களுக்குத் தெரிய வேண்டும் தானே?’ அதற்காகத்தான் இந்த வீடியோ.

சந்திர பிரியங்கா
சந்திர பிரியங்கா

அதனால் இதை விட்டுவிட்டு உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு நல்லது செய்யுங்கள். அதனால் அமைச்சர்கள் அமைதியாக இருந்து, மக்களுக்கான வேலையைப் பாருங்கள். என்னையும் பார்க்க விடுங்கள். இது தொடர்பாக ஒரு காவல்துறை அதிகாரிகிட்ட புகார் கொடுக்கப்போனேன். அப்போது, ‘எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்ன செய்வது?’ என்று நான் அவரிடம் கேட்டேன்.

அதற்கு, `வேண்டுமென்றால் ஒன்று செய்யுங்கள். பாதுகாப்புக்காக உங்கள் பெயரில் உள்ள சொத்துகளை மற்றவர்கள் பெயரில் மாற்றிவிடுங்கள்’ என்கிறார். எந்தளவிற்கு அவர்கள் சொல்லியிருந்தால் அந்த அதிகாரி அப்படிப் பேசியிருப்பார்? அப்போதுதான் யோசித்தேன். நமக்கே இப்படி என்றால்… சாமானிய மக்களின் நிலை?

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் இருக்கின்றன. அதனால் அந்த வேலையைப் பாருங்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, `பொம்பளைதானே…’ என்று பார்க்காதீர்கள். அனைத்து தொகுதிகளிலும் பெண்கள் ஓட்டுதான் அதிகம். நான் யாரைச் சொல்கிறேன் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியும். நீங்களும் வாழுங்க… என்னையும் வாழ விடுங்க..” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *