
`இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்’ என்ற பெருமையை மஹிந்திரா அடைந்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த இடத்தில் இருந்த ஹூண்டாய் இப்போது மூன்றாவது இடத்திற்குச் சென்றுவிட்டது.
கடந்த 2024-ம் நிதியாண்டோடு, 2025-ம் ஆண்டை ஓப்பிடும்போது, ஹூண்டாய் க்ரெட்டாவின் விற்பனை 20% அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஹூண்டாய் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்குப் போனதற்குக் காரணம் – அது க்ரெட்டாவை மட்டுமே அதிகமாக நம்பியதுதான். அதாவது இதே காலகட்டத்தில் ஹூண்டாயின் மற்ற கார்களான i10 நியோஸ், i20, ஆரா, எக்ஸ்ட்டர், வென்யூ, அல்கஸார், டூஸான், ஐயனிக் 5 ஆகிய ஒட்டுமொத்தக் கார்களின் விற்பனை 10% சரிவைச் சந்தித்திருக்கிறது.
மஹிந்திராவின் வளர்ச்சிக்கான காரணம், அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பெட்ரோல்/டீசல் கார்களான XUV 3XO, தார், தார் ராக்ஸ், ஸ்கார்ப்பியோ, ஸ்கார்ப்பியோ-N ஆகிய கார்களில் அது கவனம் செலுத்திய அதே வேளையில், மின்சாரக் கார்களான BE 6 மற்றும் XEV 9e ஆகியவற்றுக்கும் அது தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வந்ததுதான் அதன் எழுச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
ஜனவரி – ஜூலை 2025-க்கு இடையிலான இந்தக் காலகட்டத்தில் ஹூண்டாயின் விற்பனை 3,29,782 கார்கள் என்றால், மஹிந்திராவின் விற்பனை 3,51,065 கார்கள்.
விட்ட இரண்டாவது இடத்தைப் பிடிக்க ஹூண்டாய் அக்டோபர் மாதம் ஆல்-நியூ வென்யூவை விற்பனைக்குக் கொண்டு வருகிறது. பிடித்த இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள, மஹிந்திரா மேலும் இரண்டு புதிய கார்களை அடுத்து வரும் மாதங்களில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது.
`மஹிந்திராவுக்கும் – ஹூண்டாய்க்கும்தானே போட்டி, நமக்கென்ன’ என்று முதலிடத்தில் இருக்கும் மாருதி சுஸூகி அமைதியாக இருக்க முடியாது. ஏனெனில், அதன் விற்பனையும் 1.9% அளவுக்குக் குறைந்திருக்கிறது. எனவே, மாருதியும் தன் பங்குக்குப் புதிய கார்களை விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது. நான்காவது இடத்தில் இருக்கும் டாடாவோ, அடுத்தடுத்து சின்னதும் பெரியதுமாகப் பல புதிய அறிமுகங்களைச் செய்யத் திட்டம் தீட்டியிருக்கிறது.
இந்தப் பண்டிகைக் காலத்தில், கார் கம்பெனிகளுக்கு இடையே நடக்கும் இந்தப் பந்தயத்தில் வெற்றி பெறப்போவது என்னவோ நிச்சயம் வாடிக்கையாளர்களாகத்தான் இருக்கும். அறிவிக்கப்பட இருக்கும் ஜிஎஸ்டி வரிக்குறைப்பும் வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக இருந்தால்… வரும் காலம் கோலாகலமான பண்டிகைக் காலமாக மாறிவிடும்.