• September 1, 2025
  • NewsEditor
  • 0

விவசாயத்திற்கும், தேனீக்களுக்கும் எப்போதும் அதிக தொடர்பு இருக்கிறது. தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணமாக இருப்பதால் விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகக் கிடைக்கிறது.

இப்போது அதிக அளவில் விவசாயத்திற்கு இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதால் தேனீக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் கிராமங்களில் விளைச்சல் குறைந்துள்ளது.

அதேசமயம் தேனீக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேற ஆரம்பித்துள்ளன. இதனால் கிராமங்களில் தேனீ கூட்டைப் பார்ப்பது மிகவும் அபூர்வமாக இருக்கிறது.

மகாராஷ்டிராவில் உள்ள காடுகளில் உள்ள மரங்கள் உயரம் குறைவாக இருப்பதால் அதில் காட்டுத்தேனீக்கள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. வழக்கமான தேனீக்கள் மிகவும் உயரமான மரங்களில்தான் கூடு கட்டுவது வழக்கம். ஆனால் நகரங்களில் மிகவும் உயரமாக கட்டிடங்கள் அதிக அளவில் இருப்பதால் தேனீக்கள் நகரங்களை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

தேனீக்கள்

மகாரஷ்டிராவில் இது போன்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடந்து வருகிறது. எனவே இப்பிரச்னைக்குத் தீர்வு காண அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

அதாவது நகரங்களில் உள்ள தேனீக்களை மீட்டு அதனை மீண்டும் கிராமங்கள் கொண்டு சேர்க்கும் திட்டமாகும். இத்திட்டத்திற்காக மகாராஷ்டிரா அரசு சுற்றுச்சூழல் ஆர்வலர் அமித் கோட்சே என்பவருடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

அமித் கோட்சே ஏற்கனவே தேனீப்பெட்டிகளை அதிக அளவில் பராமரித்து வருகிறார். அவர் மூலம் நகரங்களில் உள்ள தன்னார்வலர்களுக்கு தேனீக்களைப் பிடிக்கப் பயிற்சி கொடுத்து அதனை முறையாகப் பாதுகாத்து மீண்டும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குக் கொண்டு சென்றுவிடுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

‘தேனீக்களின் நண்பர்கள்’ என்ற பெயரில் புனேயில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தின் தலைவர் ரவீந்திரா கூறுகையில், ”இது ஆரம்பத்தில் சிறிய திட்டமாக இருந்தாலும் நாளடைவில் வளர்ச்சியடைந்து தேனீ இயக்கமாக மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து அமித் கோட்சே கூறுகையில், ”ஆய்வில் தேனீக்கள் கிராமங்களில் விளை நிலங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி வருவதை ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளோம்.

அவற்றைப் பிடித்து மீண்டும் கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கி இருக்கிறோம். தேனீக்கள் கூடு கட்டுவதற்கு மூன்று முக்கியமான அம்சங்கள் காரணமாக இருக்கிறது. உயரம், எப்போதும் குடிநீர், வனப்பகுதி போன்றவை முக்கியமாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் அங்கு தேனீக்கள் கூடு கட்டுவதைத் தவிர்க்கின்றன. அதோடு மகாராஷ்டிராவில் உள்ள காடுகளில் உயரம் குறைவான மரங்களே இருக்கின்றன.

ஆனால் தேனீக்கள் 150 முதல் 200 அடி உயரத்தில்தான் கூடு கட்டும். உயரமான மரங்களை வைக்க வனத்துறை முயன்று வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுவதால் தேனீக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.

இதனால் தேனீக்களின் உற்பத்தி, அதன் ஞாபக சக்தி, மகரந்த சேர்க்கை திறன் போன்றவைப் பாதிக்கப்படுவதால் அவை நகரங்களை நோக்கிச் செல்கின்றன. நகரங்களில் போதிய அளவுக்கு உயரமான கட்டிடங்கள் இருக்கின்றன. அதோடு தண்ணீர் வசதியைத் தேடுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மாடித்தோட்டங்களும் அதிகமாக இருக்கின்றன.

தேனீக்கள்
தேனீக்கள்

எனவே தேன் கூடுகள் நகரங்களில் அதிகமாக இருக்கின்றன. புனேயில் அதிகப்படியான மரங்கள் இருப்பதாலும், மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் இருப்பதாலும் இங்கு தேனீக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் 17 ஆயிரம் தேன் கூடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பாதுகாப்பான முறையில் விவசாய நிலத்திற்கு மாற்றி இருக்கிறோம்”என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் பீட் பகுதியைச் சார்ந்த விவசாயியான மௌலி ஜாதவ் இது குறித்துக் கூறுகையில், ”2011 ஆம் ஆண்டு முதல் தேன் கூடுகள் குறைந்து வருவதைப் பார்க்க முடிகிறது. தேனீக்கள் மற்ற பூச்சிகளால் அணுக முடியாத சிறிய பூக்களின் மகரந்தக் கூட்டை அணுகி, அவற்றிலிருந்து ஏராளமான மகரந்தத்தைச் சேகரிக்கும் திறன் கொண்டவை.

இது ஒரு காலத்தில் செடிகளிடையே மிகப்பெரிய மகரந்த சேர்க்கைக்கு உதவியது. ஆனால் விவசாயிகள் தேனீக்களின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்” என்றார். சமீபத்தில் பீட் பகுதி கிராமங்களுக்கு 230 தேனீ பெட்டிகளை வேளாண் தொழில் மேலாண்மை ஏஜென்சி வைத்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *