
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று நடைபெறும் உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று, தொழில் துறை தலைவர்களுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார்.
தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 30-ம் தேதி விமானத்தில் புறப்பட்ட அவர் ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை வட ரைன் – வெஸ்ட் பாலியா மாகாண அதிகாரி அன்யா டி வூஸ்ட், பெர்லினில் உள்ள இந்திய தூதரக பொறுப்பாளர் அபிஷேக் துபே, ஃபிராங்க்பர்ட்டில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பொறுப்பு துணைத் தூதர் விபா காந்த் ஷர்மா மற்றும் ஏராளமான தமிழர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.