
காஞ்சி மடத்தின் ஆசார்யர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். இந்தப் பூவுலகில் தர்மம் தளைக்கப்பாடுபட்ட அந்த மகானை பக்தர்கள், ‘மகாபெரியவர்’ என்று அன்புடன் அழைத்தனர். வாழும்போதும் பலரின் துன்பங்களைத் தன் பார்வையால் தீர்த்துவைத்த அந்த மகான் ஸித்தி அடைந்தபிறகும் சூட்சுமமாக இருந்து பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்.
மகாபெரியவர் அவதாரம் செய்த நட்சத்திரம் அனுஷம். மாதம் தோறும் வரும் அனுஷ நட்சத்திர நாளை மகாபெரியவரின் பக்தர்கள் விசேஷ ஆராதனைகளைச் செய்து அவரை வழிபடுவது வழக்கம். அனுஷத்தன்று காஞ்சி மகானை நினைத்து வழிபாடு செய்து தொடங்கும் செயல்கள் அனைத்தும் நன்மையாக முடியும் என்பது நம்பிக்கை.
வீட்டில் சுபகாரியத் தடைகள் இருப்பவர்கள் அனுஷ நட்சத்திர நாளில் காஞ்சி மகானின் படத்துக்கு ஒரு மலரேனும் சாத்தி வழிபட்டால் தடைகள் விலகும் என்கிறார்கள் பக்தர்கள். எனவேதான் காஞ்சி பெரியவரின் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இந்த நாளில் விசேஷ வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவருக்கு மாதந்தோறும் அனுஷ நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று அனுஷ நட்சத்திரத்தை ஒட்டி விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. மகாபெரியவர் திருமேனி மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மதுரை எஸ்.எஸ் காலனியிலுள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சன் திரவியப்பொடி, மஞ்சள் பொடி, பஞ்ச கவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன . தொடர்ந்து ருத்ரா அபிஷேகமும் நடைப்பெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இந்த வைபவத்தை தரிசனம் செய்தனர். இந்நிகழ்வினை சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்த மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு முன்னின்று நடத்தினார். நிறைவாக நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.