
தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் டி.ஜி.பி, பணியில் எந்தவித சார்ஜிம் இருக்கக் கூடாது போன்ற அடிப்படை தகுதிகள் உள்ளன. அதோடு ஆளுங்கட்சியின் ஆசியும் பெற்றவராக இருக்க வேண்டும். தற்போது தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக சங்கர் ஜிவால் இருந்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு ஓய்வு பெறுவதையடுத்து அடுத்த டி.ஜி.பி யார் என்ற கேள்வி எழுந்தது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் சீனியர் டி.ஜி.பி-க்களின் பெயர்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு அதில் மூன்று பெயர்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களில் ஒருவரை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக தமிழக அரசு தேர்வு செய்யும். இதுதான் நடைமுறை.
அதன்படி தற்போது சீனியர் டி.ஜி.பி-க்களாக சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன் உள்பட 8 பேர்களின் பட்டியலை தமிழக உள்துறை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இந்தப் பட்டியல் அனுப்புவதில் ஏற்பட்ட காலதாமதத்தையடுத்து புதிய டி.ஜி.பி-க்கான பட்டியலை மத்திய அரசு அனுப்புவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் அதுவரை சீனியர் டி.ஜி.பி-க்களில் ஒருவரை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்கு பொறுப்பாக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி நிர்வாக பிரிவில் டி.ஜி.பியாக இருக்கும் வெங்கட்ராமனை உளவுத்துறை டி.ஜி.பியாக நியமித்து அவரையே சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவியையும் கூடுதல் பொறுப்பாக கவனிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிக்க உள்ள வெங்கட்ராமனின் சர்வீஸ் குறித்து டி.ஜி.பி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம்.
“8.5.1968ம் ஆண்டு வெங்கட்ராமன், நாகப்பட்டினத்தில் பிறந்தார். பி.ஏ. (எக்னாமிக்ஸ்), எம்.ஏ. (பொது நிர்வாகம்) முடித்துள்ளார். இவர் 1995-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ் அதிகாரி. பயிற்சிக்குப் பிறகு 1996-ம் ஆண்டு ஆண்டு திருச்செந்தூரில் ஏ.எஸ்.பி-யாக பணியை தொடங்கியவர். அதன்பிறகு 1997-ம் ஆண்டு கோவில்பட்டி, ராமநாதபுரம் டிவிஷன் ஏ.எஸ்.பியாக பணியாற்றினார். பின்னர் 1998- ம் ஆண்டு பட்டாலியன் கமாண்டன்ட், மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றியவர். இதையடுத்து பெரம்பலூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் எஸ்.பியாக இருந்தார். அதன்பிறகு மத்திய அரசு பணியில் 8 ஆண்டுகள் இருந்தார். அதில் சி.பி.ஐ-யில் சிறப்பாக பணியாற்றினார். பின்னர் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றவர், 2009- ம் சிபிசிஐடியில் பணியாற்றினார்.






பின்னர், சேலம் சரக டிஐஜி. லஞ்ச ஒழிப்புத்துறையில் டி.ஐ.ஜி அங்கேயே ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் சைபர் க்ரைம் பிரிவில் ஏடிஜிபியாக இருந்தார். 2021-ம் ஆண்டு ADGP head quarters-ஆக இருந்தார். டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று தற்போது நிர்வாக பிரிவிலிருந்தார். (DGP admin). தமிழக காவல்துறையில் இடமாறுதல் தொடங்கி நிர்வாக ரீதியாக பணிகளை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருக்கும் டேவிட்சன் ஆசீர்வாதத்துடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வந்த டி.ஜி.பி வெங்கட்ராமனின் பெயர் பொறுப்பு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. நேரடியாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பொறுப்பு என பணியமர்த்தினால் சில சட்ட சிக்கல்கள் ஏற்படும் எனக் கருதி வெங்கட்ராமனை உளவுத்துறை டி.ஜி.பியாக நியமித்து அதோடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவியையும் கூடுதல் பொறுப்பாக கவனிக்க வழிவகை செய்திருக்கிறார்கள்” என்றனர்.