• August 31, 2025
  • NewsEditor
  • 0

ராமநாதபுரம் செட்டியார் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன். அரிசி வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி யமுனா மற்றும் மகன், மகள் ஆகியோருடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதற்காக நேற்று நள்ளிரவு ராமநாதபுரத்தில் இருந்து வாடகை காரில் பயணம் செய்துள்ளனர். காரினை மணக்குடியை சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் ராமநாதபுரம் – மதுரை இடையிலான நான்கு வழி சாலையில் பரமக்குடி அருகே உள்ள நென்மேனி என்ற கிராமத்தின் அருகே இந்த கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த மினி லாரி ஒன்று இந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் கார் உருக்குலைந்து போன நிலையில், காரில் பயணித்த கோவிந்தராஜனின் மனைவி யமுனா (55), மகள் ரூபினி (30) மற்றும் கார் ஓட்டுநர் காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த கோவிந்தராஜன், சரண்ராஜ் மற்றும் லாரி ஓட்டுநர் ராஜா, லாரியில் பயணித்த நாகநாதன், ஜெயமாலா ஆகிய 5பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் உருக்குலைந்த கார்
விபத்தில் சிக்கிய கார்

இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கோவிந்தராஜனும் உயிரிழந்தார். இந்த கோர விபத்து தொடர்பாக பரமக்குடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *