
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பிம்ப்ரியில் இருக்கும் சங்க்வி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ரமேஸ்வர்(26). இவர் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெண்ணின் வீட்டாரிடம் பேசியபோது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
ரமேஸ்வர் மீது பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் சில கிரிமினல் வழக்குகளும் ரமேஸ்வர் மீது இருப்பதை சுட்டிக்காட்டி அவர்களது திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் காதலர்கள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து திருமண பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ரமேஸ்வரை பெண்ணின் தந்தை தனது வீட்டிற்கு அழைத்தார். ரமேஸ்வர் தனது பெற்றோருடன் சென்றார். அங்கு இரு குடும்பத்தினரும் பேசிக்கொண்டிருக்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெண்ணின் தந்தையும் உறவினர்களும் ரமேஸ்வரை தனி அறைக்கு அழைத்து சென்று சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் ரமேஸ்வர் படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் ரமேஸ்வர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். இது குறித்து வழக்கு பதிவு செய்து பெண்ணின் தந்தை உட்பட 9 பேர் கைது செய்து இருப்பதாகவும், மேலும் இரண்டு பேரை தேடி வருவதாகவும் இன்ஸ்பெக்டர் ஜிதேந்திர கோலி தெரிவித்துள்ளார்.