
காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஷ்காந்த் ஹீரோவாக நடிக்கும் படத்தை லோகேஷ் குமார் இயக்குகிறார். கிராமத்துப் பின்னணியில் டார்க் காமெடி படமாக உருவாகும் இதில், ருத்ரன் பிரவீன், ஷாதிகா, மவுரிஷ் தாஸ், அஷ்வின், நாகராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மதுரை அருகேயுள்ள வாடிபட்டியில் நடந்து முடிந்துள்ளது.
படம்பற்றி இயக்குநர் லோகேஷ் குமார் கூறும்போது, “இன்றைய காலகட்டத்தில் வட்டிக்குக் கடன் என்பது, வங்கியைத் தாண்டி, மொபைல் ஆப் வரை வந்துவிட்டது. எளியவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் கந்து வட்டி, எப்படிஅவர்களின் கழுத்தை நெரிக்கிறது என்பதை சுவாரஸ்யமான சம்பவங்களுடன், காமெடி கலந்த திரைக்கதையில் சொல்கிறோம்” என்றார்.