
Aகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, ஒரே வீட்டில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது, போலி முகவரிகள், மற்றும் இரட்டை வாக்காளர்கள் போன்ற முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் பேசினார்.
குறிப்பாக ஒரு ஒரே படுக்கை அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள், மற்றொரு வீட்டில் 46 வாக்காளர்கள், ஒரு மதுபான ஆலை முகவரியில் 68 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தார்.
இது இந்தியா முழுவதும் பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
EC का जादू देखो,
एक मकान में बसा पूरा गांव! https://t.co/N86dwguGmU— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2025
காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “தேர்தல் ஆணையத்தின் மற்றொரு அற்புதம்: அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் 947 வாக்காளர்கள் ஒரே வீட்டில் (வீட்டு எண் 6) வசிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்னவென்றால், நிதானி கிராமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளும் குடும்பங்களும் உள்ளன. ஆனால், வாக்காளர் பட்டியல் ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒரு கற்பனை வீட்டிற்குள் திணித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின், வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடு வீடாகச் சென்று நடத்திய சரிபார்ப்பால் இந்த விவகாரம் வெளியே வந்திருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் ஏன் உண்மையான வீட்டு எண்கள் சேர்க்கப்படவில்லை? இதனால் யார் பயனடைவார்கள்? இது ஒரு சாதாரண தவறு அல்ல, வெளிப்படைத்தன்மையின் பெயரால் நடந்த கேலிக்கூத்து.
வீட்டு எண்கள் அழிக்கப்பட்டால், போலி வாக்காளர்கள், போலியான அடையாளங்களை எளிதாக மறைக்க முடியும்.
ஒரு சிறிய கிராமத்தில் 947 வாக்காளர்களை ஒரே முகவரியில் ‘திணிக்க’ முடியுமென்றால், ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள முறைகேடுகளின் அளவு எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
ராகுல் காந்தி தொடர்ந்து கூறுவது போல, ‘ஜனநாயகம் திருடப்படுகிறது’ என்பதற்கு நிதானி கிராமம் ஒரு வாழும் உதாரணம். இதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதிலளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த பதிவை மறுபகிர்வு செய்து, “தேர்தல் ஆணையத்தின் மாயாஜாலத்தைப் பாருங்கள், ஒரு கிராமம் முழுவதும் ஒரு வீட்டில் குடியேறியுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் பதிவுக்கு பதிலளித்த கயா மாவட்ட நிர்வாகம், “கிராமவாசிகள் பேசிய நான்கு வீடியோ கிளிப்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “பல கிராமங்களில் வீட்டு எண்கள் ஒதுக்கப்படவில்லை.
இதனால் வாக்காளர் பட்டியலில் குறியீட்டு வீட்டு எண்கள் கொடுக்கப்படுகின்றன. குறிப்பிடப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் கிராமத்தில் வசிப்பவர்கள்.
உண்மையான வாக்காளர்கள். நிதானி கிராமத்தின் 161-வது வாக்குச்சாவடியின் வாக்காளர்களே நிலைமையை தெளிவுபடுத்துகின்றனர்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் பேசிய ஒரு கிராமவாசி,“நிதானி கிராமம், 161வது வாக்குச்சாவடி. 900 வாக்காளர்கள் ஒரே வீட்டில் இருப்பதாக அவதூறு பரப்பப்படுகிறது.
இது முற்றிலும் தவறு. தேர்தல் ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில் நாங்கள் திருப்தி அடைகிறோம். இங்கு வீட்டு எண்கள் இல்லை. நாங்கள் கிராமத்தில் வசிக்கிறோம், கிராமத்தில் வீட்டு எண்கள் இருப்பதில்லை” என்கிறார்.
மற்றொரு வீடியோவில், “என் பெயர் ரிங்கி குமாரி. நான் முன்பும் வாக்களித்திருக்கிறேன், இப்போதும் வாக்களிக்கிறேன். கிராமத்தில் வீட்டு எண்கள் இல்லை, ஆனால் என் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது” எனக் குறிப்பிடுகிறார்.
பிஹார் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், “குறியீட்டு வீட்டு எண் என்பது ஒரு வாக்காளரின் வசிப்பிடத்தில் உண்மையான வீட்டு எண் இல்லாதபோது வழங்கப்படும் ஒரு கற்பனையான (குறியீட்டு) வீட்டு எண் ஆகும்.
பல கிராமங்கள், குடிசைகள் அல்லது தற்காலிக குடியிருப்புகளில் வீடுகளுக்கு நிரந்தர வீட்டு எண்கள் இருப்பதில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் சென்று, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தொடர் எண்ணை (1, 2, 3…) ஒதுக்குவார்.
இந்த எண் வாக்காளர்களை சரியான வரிசையில் பட்டியலிடவும், பதிவு செய்யவும் வசதியாக பயன்படுத்தப்படுகிறது. இது வாக்காளர்களை அடையாளம் காணவும், வாக்காளர் பட்டியலை முறையாக தயாரிக்கவும் பயன்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.