
வித்தியாசமான உணவு அனுபவங்களைத் தேடும் உணவு ஆர்வலர்களுக்காகவே ரிவைண்ட் (Rewind) என்ற பிராண்ட், 9-வோல்ட் பேட்டரி சுவையில் சிப்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிப்ஸ் பேட்டரியை நாக்கால் தொடும்போது ஏற்படும் கூச்ச உணர்வை அனுபவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரி சுவை சிப்ஸ், முற்றிலும் பாதுகாப்பான மற்றும் உண்ணக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் உண்மையான பேட்டரி கூறுகள் எதுவும் இல்லை என்பதையும் ரிவைண்ட் பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சிப்ஸில் சிட்ரிக் அமிலம், சோடியம் பைக்கார்பனேட் மற்றும் கனிம உப்புகளின் கலவை பயன்படுத்தப்பட்டு, உலோக சுவை மற்றும் நாக்கில் லேசான கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“இது ஒரு வித்தியாசமான சவாலாக இருந்தது. நாக்கில் கூச்ச உணர்வை ஏற்படுத்தும் ஒரு சுவையை உருவாக்குவதே எங்கள் நோக்கமாக இருந்தது” என்கிறார் இந்த சுவையை உருவாக்கிய செஃப் மற்றும் சுவை நிபுணரான மத்தியாஸ் லார்சன்.
ரிவைண்ட் பிராண்ட், நாஸ்டால்ஜியாவை மையப்படுத்தி இந்த சிப்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
90 காலகட்டங்களில் பலர் பேட்டரியை நாக்கால் தொட்டு பார்த்து அனுபவம் பெற்றிருப்பார்கள், மீண்டும் அதனை உயிர்ப்பிக்கும் வகையில் இந்த சிப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த சிப்ஸ் நெதர்லாந்தில் உள்ள ஏஎச், ஜம்போ, பிளஸ், ஹூக்விளீட் மற்றும் பிக்னிக் போன்ற கடைகளில் €1.89 (தோராயமாக ₹200) விலையில் கிடைக்கிறது. விரைவில் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.