
யானைகள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்காக சைகைகளைப் பயன்படுத்துவதாக ஆராய்ச்சி குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் இதழில் (Royal Society Open Science) எல்யூடெரி என்பவர் தலைமையிலான குழுவினர் வெளியிட்ட தகவலின்படி யானைகள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்காக சைகைகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் நடத்தப்பட்ட ஆய்வு
ஜிம்பாப்வேயில் ஆப்பிரிக்க சவன்னா யானைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் யானைகள் மனித ஆய்வாளர்களிடமிருந்து ஆப்பிள்களைப் பெறுவதற்காக பல்வேறு சைகைகளைப் பயன்படுத்தியுள்ளன. இந்த சைகைகள், மனிதர்கள் கவனமாக இருக்கும்போது மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
அவை தற்செயலாக இல்லாமல், முதல் சைகை விரும்பிய பலனைத் தரவில்லை என்றால், யானைகள் அதை மீண்டும் மாற்றியமைப்பதாக கண்டறிந்துள்ளனர். மனிதர்களின் கவனத்தைப் பொறுத்து தங்கள் உத்திகளை மாற்றுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
யானைகளின் சைகை மொழி
ஆய்வில், யானைகள் 38 வெவ்வேறு வகையான சைகைகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, யானைகளின் அறிவாற்றல் மற்றும் சமூக திறன்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்தியுள்ளது. வேண்டுமென்றே செய்யப்படும் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளும் யானைகளின் திறன், மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுடனான தொடர்பு முறைகளையும் வெளிப்படுத்துகிறது.