
2022-ம் ஆண்டு உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ரஷ்யாவை இந்தியா வெளிப்படையாக விமர்சித்ததில்லை.
ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் ஐ.நா. பொதுச் சபை தீர்மானங்களில் இந்தியா வாக்களிப்பதிலிருந்தும் விலகியிருந்தது.
அதே நேரம் “இந்தியா அமைதியின் பக்கம் உறுதியாக நிற்கிறது” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகம்தான் இந்தப் போருக்கு முக்கியப் பொருளாதாரம். இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்தார்.
மேலும், இந்தியா மீது 50% வரியும் விதித்திருக்கிறார். இந்த நிலையில், ரஷ்யா – சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், Shanghai Cooperation Organisation (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்கும் விதமாக சீனாவுக்குச் சென்றிருக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது, உக்ரைனில் அமைதியான தீர்வு ஏற்படுவதற்கான இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
உக்ரைனில் நிலவிவரும் சமீபத்திய சூழல்கள் குறித்து அதிபர் ஜெலென்ஸ்கி தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, “அங்கு விரைவில் அமைதி திரும்புவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று வலியுறுத்தினார்” என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த உரையாடலின் மூலம், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.