
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்களில், இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, மாவட்ட ஆட்சியர், வன அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீலகிரி மாவட்டம், மசினகுடி உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ரிசார்ட்களில், இரவு நேரங்களில் அதிக சத்தத்தை எழுப்பக் கூடிய, ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதாக, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சி.மோகன், விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் ஆகியோர் புகார் தெரிவித்தனர்.