
இந்திய பிரீமியர் லீக்கில் (IPL)-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது.
IPL-ல் ஆர்.சி.பி அணி வீரராக தனது பயணத்தைத் தொடங்கிய ராகுல் டிராவிட், 2011-13 ஆண்டுகளில் ராஜஸ்தான் அணியில் விளையாடினார். தொடர்ந்து அங்கேயே பயிற்சியாளராக தொடர்ந்தார்.
2008-ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், அவரது அமைதியான விளையாட்டு பாணி, நம்பிக்கையூட்டும் கேப்டன்சி மற்றும் துல்லியமான பேட்டிங் அவரை உறுதியான வீரராக நிலைநிறுத்தியது.
2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய அவர், கேப்டனாக இருந்து அணியின் வலிமையை உயர்த்தினார். 2013-ல் இறுதிப்போட்டிவரை அழைத்துச் சென்று இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தார் ராகுல் டிராவிட்.
பின்னர், IPL-ல் பயிற்சியாளராக பரிணமித்தார். 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மென்டராகவும் டீம் டைரக்டராகவும் பணியாற்றியவர், பின்னர் இந்திய ஏ-அணி மற்றும் இளம் அணிகளை வெற்றிக்கு வழிநடத்தினார்.

2024-ஆம் ஆண்டு இந்தியாவை உலகக் கோப்பையில் வெற்றிபெறச் செய்த பின், அவர் மீண்டும் IPL-க்கு திரும்பி 2025 பருவத்தில் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். காயம் காரணமாக வீல் சேரில் இருந்தபடி வீரர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
ஆனால் 2025 பருவத்தில் அணியின் செயல்திறன் எதிர்பார்த்தபடி இல்லை. 14 ஆட்டங்களில் வெறும் நான்கு வெற்றிகள் மட்டுமே பதிவானதால், புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் முடித்தது. இதனால் ரசிகர்களும் நிர்வாகமும் அதிருப்தியடைந்தனர்.
இந்த சூழ்நிலையில், ராகுல் டிராவிட் தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.

அவரின் ராஜினாமாவிற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அணியின் மோசமான செயல்திறன், நிர்வாகத்தின் மறுசீரமைப்பு திட்டங்கள் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் தொடர்வாரா என்ற குழப்பமும் நிலவுகிறது.
ராகுல் டிராவிட் விலகியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்த பருவத்திற்கு புதிய தலைமைப் பயிற்சியாளரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ரசிகர்கள், கிரிக்கெட்டில் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்ற ராகுல் டிராவிட் அடுத்தது எங்கு பயிற்சியாளராக பணி ஏற்கப்போகிறார் என்பதை அறிய ஆவலுடன் உள்ளனர்.