
சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: ‘ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 7-ம் தேதி அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படக்கூடாது என்பதை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று 2021 அக்டோபர் 11-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. தேவையான வழிகாட்டு நெறிமுறைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.