
காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான ஜி.கே. மூப்பனாரின் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள ஜி.கே. மூப்பனாரின் நினைவிடத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:
“தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனார் அவர்களுக்கு எமது கட்சியின் சார்பாக புகழஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
எளிமையும் வலிமையும் நிறைந்த, தேசிய அளவில் பெரும் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்தவர் மூப்பனார். அவருடைய தலைமையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பெரும் வளர்ச்சி கண்டது.
நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது, மூப்பனார் அவர்களின் ஆளுமையைக் கண்டிருக்கிறேன். அவருக்கு நாடு முழுவதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது.
அவர் நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும், காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான முகமாகக் கருதப்பட்டார். அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்பு இருந்தது.
அதனால் எல்லோரும் அதைக் கேட்டுச் செயல்பட்டார்கள். இவ்வளவு பெரிய ஆளுமை இருந்தும், மூப்பனார் இந்தியாவின் பிரதமர் ஆவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டபோது, அவரைப் பிரதமராக விடாமல் தடுத்த சக்திகள் எதுவென்று நம் அனைவருக்கும் தெரியும்.
இன்று “தமிழ்நாடு, தமிழர் வளர்ச்சி” எனப் பேசுபவர்கள், அன்று ஒரு தமிழன் பிரதமராகும் வாய்ப்பை ஆதரிக்காமல் தடுத்தவர்கள். இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று நான் கருதுகிறேன்.

புகழஞ்சலி செலுத்த வந்த இடத்தில் அரசியல் பேசக்கூடாது என்பது தெரியும். ஆனால், இங்கு அரசியல் பேசுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்.
தமிழ்நாட்டில் மூப்பனார் அவர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப ஒரு நல்லாட்சி அமைய நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு பெரும் ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டிய தேவை இருக்கிறது.
இந்தக் கூட்டணியின் மூலமாக ஒன்றிணைந்து, அந்த முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் போதை பழக்கம் அதிகமாகிவிட்டது. மது ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் ஒரு குடும்பம் மட்டுமே பிழைத்துக் கொண்டிருக்கிறது.
“எங்களை இதிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று மக்கள் கேட்கிறார்கள். இந்தச் சூழலில், மக்களுக்கு உதவி செய்வதும், மக்களுக்காக உழைப்பதும் நமது கடமை.

எனவே, இந்தக் கூட்டணியை நல்ல முறையில் வழிநடத்தி, வெற்றி பெற்று, மக்களுக்குச் சிறப்பாகத் தொண்டாற்ற வேண்டும். இதில் இருக்கக்கூடிய சிறு சிறு முரண்பாடுகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.
கடுமையாக உழைத்து அடுத்த ஆண்டு தேர்தலில் வெற்றிபெறச் செய்வதே நம் மூப்பனாருக்கு நாம் செய்யும் மிகப் பெரிய புகழஞ்சலி,” எனப் பேசினார்.