
மத்திய புலனாய்வு காவலர்கள் (CBI), ரூ. 232 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) மூத்த மேலாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
AAI சார்பில் ராகுல் விஜய் என்ற அதிகாரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புகாரின் படி, அந்த அதிகாரி டேராடூன் விமான நிலையத்தில் பணியிலிருந்தபோது, அதிகாரப்பூர்வ மின்னணு பதிவுகளை மாற்றி விமான நிலைய ஆணையத்தின் நிதியைத் திருடும் வகையில் முறையாக திட்டமிட்ட தொடர்ச்சியான மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து சிபிஐ சார்பில், “2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் டேராடூன் விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அப்போது மின்னணு பதிவுகளை மாற்றி கையாளும் திறனை வெளிப்படுத்தியுள்ளார். போலியான, கற்பனையான சொத்துகளைப் பதிவு செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளார்.
வழக்கமான கண்காணிப்புகளில் தப்புவதற்காக, பதிவு செய்யும் சொத்துகளில் பூஜ்ஜியத்தை சேர்த்து மதிப்பை உயர்த்துவது போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார்,” எனக் கூறியுள்ளனர்.
மேலும், ஆணையத்தின் நிதியிலிருந்து திருடப்பட்ட பணத்தை தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.

மோசடிகள் மூலம் குற்றவாளியின் தனிப்பட்ட கணக்குக்கு ரூ. 232 கோடி திருப்பி விடப்பட்டிருப்பதாக சி.பி.ஐ தெரிவிக்கிறது.
“முதற்கட்ட வங்கிப் பரிவர்த்தனைப் பகுப்பாய்வில், குற்றவாளி வரவு வைக்கப்படும் பணத்தை ட்ரேடிங் கணக்குகளுக்கு மாற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது,” என்கிறது சிபிஐ அறிக்கை.
முன்னதாக, ஆகஸ்ட் 28-ம் தேதி ராகுல் விஜய்யின் அலுவலகம், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
CBI arrests Senior Manager, Airports Authority of India for embezzlement of Approx. Rs. 232 Crore pic.twitter.com/IGMBPo3i3z
— Central Bureau of Investigation (India) (@CBIHeadquarters) August 30, 2025