
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
“மாநாடு நடத்த இந்தக் காட்டிற்குள் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை.
அணில்களுக்கும் சேர்த்துதான் காடு வளர்க்க நாம் பாடுபடுகிறோம். மரங்களுக்கு என்ன மாநாடு, அவர்களுக்கு என்ன மறை கழன்றுவிட்டதா என்று சிலர் கேட்பார்கள். மறை கழன்றதால் அல்ல; மறையைக் கற்றதால் இந்த மாநாடு நடத்துகிறோம்.”
நாட்டிற்காக நிற்பவர்கள் தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டிற்காக நிற்பவர்கள் இதைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். அரசு, “மரம் நடுவோம், மழை பெறுவோம்” என்ற வாசகத்துடன் தங்கள் பொறுப்பு முடிந்துவிடுவதாக நினைக்கிறது.
எது சேவை அரசியல், எது அரசியல் என்பதை உணர்ந்து செயலில் ஈடுபடுபவர்கள் தான் இந்த வேலையை செய்வார்கள். செய்திகளுக்காக அரசியல் செய்வோர் இந்த வேலையை செய்ய மாட்டார்கள். கட்சி அரசியல், தேர்தல் அரசியல் செய்வோர் இந்த வேலையை செய்ய மாட்டார்கள்.
செல்வம் என்றால் என்ன?
மக்களுக்கான அரசியல் செய்பவன் தான் இந்தப் பணிகளை செய்வான். அப்படித்தான் மாநாடுகளின் மாநாடு, மரங்களுக்கான மாநாடு நடத்தப்படுகிறது. அடுத்து மலைகளின் மாநாடு, தண்ணீர் மாநாடு நடைபெறும்.
செல்வம் என்றால் என்ன? காடுதான் செல்வம். கடல், மலை, மணல் இதுதான் செல்வம். காந்தி படம் மட்டுமே செல்வம் அல்ல; அது வெறும் தாள்.
அந்தத் தாளைத் தந்தவனே மரம்தான். இவன்தான் நம் செல்வம். ஒரு மாநில அரசு நிதிநிலை அறிக்கையில் தூய காற்றிற்காக ரூ. 4,500 கோடி ஒதுக்கியுள்ளது.

தூய்மையான காற்றை எந்த நாட்டில் வாங்க முடியும்? அதை எப்படி நம் குடிமக்களுக்கு விநியோகம் செய்வார்கள்?
மழைநீரைச் சேமிக்காமல், அதை கடல் நீரில் கலக்கி விட்டு, பிறகு அதைச் சுத்திகரிக்கிறோம் என்று சொல்லி ரூ. 50,000 கோடி சம்பாதிக்கும் அரசாக இருக்கிறது.
தண்ணீரைப் போல காற்றையும் விற்பார்கள். நான் எழுதிக் கொடுத்ததைப் பேசுபவனல்ல.
சத்தியமாக நானேதான் பேசுகிறேன். இந்த பூமிக்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதுதான் திரும்பவும் நமக்கு கிடைக்கும் என்பதை மட்டும் மறவாதீர்கள்,” என்றார்.