
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் திருத்தணியில் மரங்கள் மாநாட்டை நடத்தியுள்ளார். இயற்கை வளங்களின் முக்கியத்துவம் பற்றி பேசிய சீமான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என சில சுவாரஸ்யமான திட்டங்களை பகிர்ந்திருந்தார்.
“பத்தாண்டு பசுமைத் திட்டம், பல கோடி பனைத் திட்டம்,” என சீமான் பேசியவை:
‘குழந்தை பிறந்தவுடனேயே ஒரு மரம் நட வேண்டும். குழந்தைக்கு வைக்கும் பெயரையே மரத்துக்கும் வைத்து வளர்க்க வேண்டும்.
குழந்தை வளர்ந்து ஒவ்வொரு பிறந்தநாளை கொண்டாடுகையிலும் ஒரு மரம் நட வேண்டும்.
பத்தே ஆண்டுகளின் பூமிப்பந்தை பச்சை போர்வை ஆக்குவேன்.
ஆடு, மாடு, மனிதக் கழிவுகளிலிருந்து மீத்தேனையும் ஈத்தேனையும் எடுக்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரித்து மரம் வளர்க்க தண்ணீர் கொடுப்பேன்.
மரத்தை வெட்டினால் ஆறு மாதம் சிறை.
எந்த வீட்டில் பெண்பிள்ளை பிறந்தாலும் ரூ.5000 வைப்புத்தொகையாக போடுவேன். அந்தப் பெண் படித்து முடித்து மண வயதை எட்டுகையில் 20 லட்ச ரூபாயை கையிலெடுத்து கொடுப்பேன்.
பள்ளி மாணவன் 10 மரம் நட்டால் அவனுக்கு தேர்வில் 10 மதிப்பெண்கள். 100 மரங்களை நட்டு வளர்த்தால் ‘சிறந்த தமிழ் தேசிய குடிமகன்’ சான்றிதழ் வழங்கப்படும்.
‘சிறந்த தமிழ் தேசிய குடிமகன்’ சான்றிதழை வைத்திருப்பவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.

1000 மரக்கன்றுகளை நட்டால், அந்த நபர் இறக்கும்போது அரசு மரியாதையோடு அடக்கம்.
100, 500, 1000 என்ற எண்ணிக்கையில் மரங்களை நடுகையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சொந்த மரமாக இருந்தாலும் அனுமதியில்லாமல் வெட்டக்கூடாது. கிளையை வெட்டினால் கூட 6 மாதம் சிறைத் தண்டனை. தமிழ்நாட்டை பசுங்காடாக மாற்றுவோம்,” என்றார்.