
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி உயிரிழந்த நிலையில் இந்திய ஊழியர் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.
பிரதிக் பாண்டே என்ற அந்த மென்பொருள் பொறியாளர், மைக்ரோசாஃப்டின் ‘ஃபாப்ரிக்’ என்ற தயாரிப்பில் பணியாற்றி வந்தார். ஆகஸ்ட் 19-ம் தேதி மாலை அலுவலகம் சென்ற அவர், மறுநாள் அதிகாலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணத்தில் சந்தேகத்துக்கு இடமான எந்தவொரு விஷயத்தையும் கண்டுபிடிக்கவில்லை எனக் காவலர்கள் கூறியிருக்கின்றனர். சாண்டா கிளாரா கவுண்டி மருத்துவ பரிசோதகர் இதுவரையில் மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்தவில்லை.
குடும்பத்தினர், உயிரிழந்தவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதுவரை இந்த சம்பவம் குறித்து எந்தவித எதிர்வினையும் அளிக்கவில்லை.
சில தகவல்களின்படி, ஆகஸ்ட் 20-ம் தேதி தனது மேசையில் குப்புற விழுந்த நிலையில் பிரதிக் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து புகாரளிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 40 மணி நேரம் தாமதப்படுத்தியதாக டி.என்.ஏ. செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
யார் இந்த பிரதிக் பாண்டே?
பிரதிக் பாண்டே இந்தியாவில் பிறந்து கல்வி கற்றவர். போலாலில் உள்ள ராஜீவ் காந்தி பிரௌத்தோகிகி விசுவவித்யாலயா கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம் மற்றும் சான் ஜோஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டங்கள் பெற்றுள்ளார்.
இந்தியாவின் நொய்டாவில் உள்ள நியூஜென் மென்பொருள் நிறுவனத்திலும், பூனேவில் உள்ள ஜான் டீர் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். 2020-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணையும் முன், ஆப்பிள், இல்லுமினா மற்றும் வால்மார்ட் லாப்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
மரணத்துக்குக் காரணம்?
35 வயதாகும் பிரதிக், கடந்த சில நாள்களாக மனஅழுத்தத்தில் இருந்தார் எனக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பல்வேறு ப்ராஜெக்ட்களில் பணியாற்றியதோடு, சரியான தூக்கம் இல்லாமல் உழைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு முன்பதாக எவ்வித நோய் பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. சாண்டா கிளாரா கவுண்டி மருத்துவர்கள், முதல் கட்டமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக டி.என்.ஏ. தளம் தெரிவித்துள்ளது.