
நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி (Vipul Manubhai Pancholi) குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக அக்டோபர் 1, 2014 அன்று பதவியேற்றார்.
பின்னர் ஜூலை 24, 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகஸ்ட் 27, 2025 அன்று உச்சநீதிமன்றக் கொலீஜியம் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது.
அதனை ஏற்று, ஆகஸ்ட் 29, 2025 அன்று அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். ஆனால், இவருக்கு முன்பு பதவி வழங்கப்பட வேண்டிய மூத்த பெண் நீதிபதிகள் இருந்தபோதும் ஏன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
கொலீஜியத்தின் ஒரே பெண் நீதிபதியான பி.வி. நாகரத்னா, இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA), உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் நீதித்துறை நியமனங்களில் போதுமான பாலினப் பன்முகத்தன்மையை உறுதி செய்யுமாறு கொலீஜியத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆகஸ்ட் 30, 2025 அன்று, இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்ட தீர்மான அறிக்கையில்,
“உத்தரகண்ட், திரிபுரா, மேகாலயா மற்றும் மணிப்பூர் போன்ற உயர்நீதிமன்றங்களில் தற்போது பெண் நீதிபதிகள் எவரும் இல்லை.
நாடு முழுவதும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான கிட்டத்தட்ட 1,100 பதவிகளில், சுமார் 670 பதவிகளில் ஆண் நீதிபதிகளும், 103 பதவிகளில் மட்டுமே பெண் நீதிபதிகளும் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த நீதிபதிகள் நியமனங்களில் ஒரு பெண்ணும் நியமிக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2021 முதல் உச்சநீதிமன்றத்திற்கு எந்த பெண் நீதிபதியும் நியமிக்கப்படவில்லை. தற்போது, உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டுமே ஒரே பெண் நீதிபதி.
இதற்கு முன்பு, மே 24, 2025 மற்றும் ஜூலை 18, 2025 ஆகிய தேதிகளில், SCBA-வின் தலைவர் மற்றும் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், நீதித்துறை நியமனங்களில் பெண்களுக்கு குறைந்தபட்ச விகிதாசார பிரதிநிதித்துவமாவது வழங்க வேண்டும் என இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீதிமன்றத்தில் பாலின சமநிலை இருப்பது, நியாயமான மற்றும் சமமான பிரதிநிதித்துவத்திற்கு மட்டுமல்லாமல், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், நீதித்துறை கண்ணோட்டங்களை மேம்படுத்தவும், சமூகத்தின் பன்முகத்தன்மையை நீதி நிறுவனத்தில் பிரதிபலிக்கவும் அவசியமாகும்.

அதன்படி, உச்சநீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் வரவிருக்கும் நீதித்துறை தேர்வுகளில் மேலும் பல பெண் நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.
பலரின் பதவியையும் உயர்த்த வேண்டும். அதற்கான அவசர மற்றும் உரிய கவனத்தை அளிக்குமாறு இந்திய தலைமை நீதிபதி மற்றும் கொலீஜியத்திடம் கேட்டுக் கொள்கிறோம்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.