
பர்னிச்சர் கடையில் பணிபுரியும் அபி (ஃபகத் ஃபாசில்) ஒரு நாள் தனது சகப் பணியாளருடன் பர்னிச்சர் பொருளை டெலிவர் செய்வதற்குக் கிளம்புகிறார். எதேச்சையாக அங்கு நிதியை (கல்யாணி ப்ரியதர்ஷன்) சந்திக்கிறார். அந்த சமயத்தில் நிதியின் காதல் வாழ்க்கையில் ஒரு பிரேக் ஏற்படுகிறது. பிறகு அபிக்கும் நிதிக்கும் காதல் மலர்கிறது.
இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, ‘கல்யாண மாப்பிள்ளையாகக் குதிரையில் திருமண அரங்கிற்கு நீ வந்திறங்க வேண்டும்’ என்று அபியிடம் தன் ஆசையை நிதி தெரிவிக்கிறார்.
காதலியின் ஆசையை நிறைவேற்றிட, திருமணம் நடக்கும் அரங்கிற்குக் குதிரையில் கிளம்புகிறார் அபி. திடீரென எதிர்பாராத நேரத்தில் குதிரை திமிறிக் குதிக்கிறது. அதனால் குதிரையிலிருந்து கீழே விழும் அபிக்கு தலையில் பலத்த காயமும் ஏற்படுகிறது. பிறகு கோமா நிலைக்கும் செல்கிறார்.
மீண்டும் இயல்பு நிலைக்கு அபி திரும்பினாரா, அபிக்கும் நிதிக்கும் திருமணம் நடைபெற்றதா என்பதற்கு காமெடி கலந்த பதிலைச் சொல்கிறது இந்த ‘ஓடும் குதிரை சாடும் குதிரை’ திரைப்படம்.
காதலிக்காக பெருங்காதலை கொடுக்குமிடம் தொடங்கி, படம் முழுக்க சுறுசுறுப்பான மோடிலேயே வலம் வருகிறார் ஃபகத் ஃபாசில். உங்களை இப்படியான ரொமான்டிக் பாய் டோனில் பார்த்து ரொம்ப நாளாச்சு ஃபா ஃபா! கோமாவுக்குப் பிறகான அடுத்த சில நிமிடங்களில் நடிப்பிற்குள் கலகலப்பு கலந்திடாமல் மயக்க நிலையை மட்டுமே முகத்தில் காட்டியது சிறப்பு!
நிதியாக கல்யாணி ப்ரியதர்ஷன் டெம்ப்ளேட் ஹீரோயின் கதாபாத்திரத்தில் வந்து போகிறார். ஆனால், நடிப்பில் ஆங்காங்கே சில புதுமைகளையும் புகுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.

இரண்டாம் பாதியில் ‘குறுக்கே இந்த கௌஷிக் வந்தா’ என வெறுமனே எவ்வித தாக்கத்தையும் தராமல் வந்து போகிறார் நடிகை ரேவதி பிள்ளை. அவருடைய நடிப்பைத் தாண்டி, அவரின் பின்கதையும் பிரச்னைகளும் அழுத்தமாக இல்லாததால், ‘இவர் படத்திலிருந்தாரா’ என்றே நம்மை யோசிக்க வைத்திருக்கிறார்கள். கிரேஸி டோனில் படம் முழுக்க வந்து தனது உடல் மொழியால் கிச்சு கிச்சு மூட்டுகிறார் லால்.
இவர்களைத் தாண்டி, காமெடிக்காக வரும் வினய் ஃபோர்ட், இடைவேளை பாபு ஆகியோர் மட்டும் மனதில் தங்குகிறார்கள். அதே சமயம், சுவாரஸ்யம் சேர்ப்பதாக நினைத்து இரண்டாம் பாதியில் வீம்புக்கு என்று பல கதாபாத்திரங்களைத் தேவையில்லாமல் சேர்த்துச் சோதிக்கவும் செய்திருக்கிறார்கள்.
பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் மென்மையான லைட்டிங்கில் திரைக்கு நல்லதொரு விஷுவலைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜின்டோ ஜார்ஜ்.
காமெடி, காமெடி என முதற்பாதியில் தேவையின்றி ‘ஓ….டும், நீ…ளும்’ காட்சிகளை வெட்டிய கையோடு, இரண்டாம் பாதியின் நீளத்தையும் படத்தொகுப்பாளர் நிதின் ராஜ் அரோல் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.

சோர்வான காட்சிகளிலும் தன்னுடைய இசையைத் தனித்து நிற்கச் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் வர்கீஸ். காதலைக் கொண்டாடும் பாடலாக வரும் ‘துப்பட்டா வாலி’ பாடலும், லால் குரலில் வரும் ‘தூக்கியிரிக்கும்’ பாடலும் தொய்வடைந்த காட்சிகளால் அயர்ச்சியூட்டும் படத்துக்கு உயிர்ப்பூட்ட முயன்றிருக்கின்றன.
காமெடி, கலாட்டாவான கல்யாணக் கொண்டாட்டம் என இந்த மலையாள சினிமாவின் முதல் 20 நிமிடங்கள் நம்மைக் கைதட்டிக் குலுங்கிச் சிரிக்க வைக்கின்றன. ஆனால், அந்த 20 நிமிடங்களுக்கு மேல், படத்தில் கதையைத் தனிப்படை அமைத்துத் தேட வேண்டிய இக்கட்டான நிலை நமக்கு ஏற்படுகிறது. வலுவான மோதல் டச் இல்லாமல் முதற்பாதியின் சில நிமிடங்களுக்குப் பிறகு முழுத் திரைப்படமும் திக்குமுக்காடி அந்தரத்தில் தொங்கி நிற்கிறது.
இப்படி நம் பொறுமையைச் சோதிக்கும் பல முயற்சிகள் வந்துகொண்டிருக்கும்போது, ஒரு டஜன் மொக்கை காமெடிகளையும் வம்படியாகத் திரைக்கதையில் ஏற்றி அனுப்பி, வண்டியை முழுதாய் கவிழ்த்திருக்கிறார் இயக்குநர் அல்தாஃப் சலீம்.

அதோடு, காலாவதியான கமர்ஷியல் சினிமாக்களின் நம்பகத்தன்மை இல்லாத டெம்ப்ளேட் காட்சிகளைச் சிறிதுகூட தூசி தட்டாமல் படத்தின் முக்கிய இடங்களில் அப்படியே சேர்த்திருக்கிறார்.
எங்கெங்கோ சுற்றி, எத்தனையோ கதாபாத்திரங்களைப் புதிது புதிதாக க்ளைமாக்ஸ் வரை சேர்த்துக் கொண்டே இருப்பதெல்லாம் ஓவர்டோஸ் இயக்குநரே! திக்கற்று அலையும் திரைக்கதையைக் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் காட்சிகள், கதாபாத்திரங்கள், அவர்களுக்கு வரும் பிரச்னைகள் என எதிலுமே ஒரு தெளிவில்லாத போக்கு, புரிந்துகொள்ள முடியாத சிக்கல்கள் என்பதாகக் காட்சிகள் விரிவதெல்லாம் இது ஸ்பூஃப் படமா, சர்ரியலிச படமா என்று கேள்வி கேட்க வைக்கின்றன.
பலவீனமான எழுத்தால் இந்த `ஓடும் குதிரை சாடும் குதிரை’ வலுவிழந்து, கடைசி வரை திசை தெரியாமல் எங்கெங்கோ ஓடுவதுடன், திமிறி எழுகிறேன் என்கிற பெயரில் படம் பார்க்கும் நம்மையும் கோமா நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது.