
மராத்தா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். அவர்களின் கோரிக்கையில் குறிப்பிட்ட பகுதியை மாநில அரசு ஏற்கனவே நிறைவேற்றி விட்டது. ஆனாலும் இவ்விவகாரத்தில் மராத்தா சமுதாயத்தினரை ஒ.பி.சி. பிரிவில் முழுமையாக சேர்க்கவேண்டும் என்று கோரி மனோஜ் ஜராங்கே தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.
ஒ.பி.சி. பிரிவில் இருக்கும் கும்பி இனத்தவராக தங்களை அங்கீகரித்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீறாமல் தங்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனோஜ் ஜராங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்போராட்டம் இப்போது மும்பையில் மையம் கொண்டுள்ளது. மும்பையில் நேற்று காலை ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜராங்கே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கிறார். மகாராஷ்டிரா முழுவதும் இருந்து 5 ஆயிரம் வாகனங்களில் வந்துள்ள மராத்தா சமுதாய மக்கள் தென்மும்பையை முற்றுகையிட்டுள்ளனர். இவர்களால் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சர்ச்கேட், சி.எஸ்.டி ரயில் நிலையங்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி இருக்கிறது. இதனால் தென்மும்பையில் உள்ள அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அவர்களில் அதிகமானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர் தென்மும்பையை முற்றுகையிட்டுள்ளனர். ஒரு நாள் மட்டுமே போராட்டம் நடத்த அரசு அனுமதி கொடுத்திருந்தது. ஆனால் அதை மீறி போராட்டம் இரண்டாவது நாளை எட்டி இருக்கிறது. இப்போராட்டத்திற்கு 2700 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் மனோஜ் ஜராங்கே பேசுகையில், ”அரசு போராட்டக்காரர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் கூட கிடைக்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது.
அரசு எங்களை நடத்தும் விதத்தை மராத்தா இன மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நாங்களும் திரும்ப செய்வோம். முதல்வர் என்ன சாதித்துவிட்டார்.
சிறை, துப்பாக்கி தோட்டாக்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் போராடியபோது எனது சகோதரர்கள், சகோதரிகளின் மண்டையை உடைத்தார்கள். கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றுகூறி விவசாயிகளின் வாக்கு வங்கியை வாங்கி ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் விவசாயிகள் கடன் இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை இங்கிருந்து நகரமாட்டோம். இது கடைசி போராட்டம். சிறை, துப்பாக்கி தோட்டாக்களை சந்திக்க தயாராக இருக்கிறோம். எனது உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்.
ஆனால் போராட்டத்தை வாபஸ் பெறமாட்டேன். போராட்டக்காரர்கள் அமைதி காக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர், சரத்பவார் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மனோஜ் ஜராங்கேயை நேரில் சந்தித்து பேசினர். ஆனால் கடந்த முறை மனோஜ் ஜராங்கே போராட்டம் நடத்தியபோது தொடர்ந்து அவருடன் சிவசேனா(ஷிண்டே) தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இப்போது ஏக்நாத் ஷிண்டேயும், அவரது கட்சியினரும் ஒதுங்கியே இருக்கின்றனர். அரசும் இம்முறை அவசரம் காட்டாமல் இருக்கிறது.

போராட்டக்காரர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களை கிராமத்தில் இருந்தே எடுத்து வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். நரிமன் பாயிண்ட், பேஷன் தெரு, மெரைன் டிரைவ் போன்ற இடங்களில் போராட்டக்காரர்கள் தெருக்கள் மற்றும் சாலைகளில் அமர்ந்து நடனமாடி மும்பை பயணத்தை அனுபவித்தனர். அவர்கள் புறநகர் ரயிலில் ஏறி கணபதி விழா நடைபெறும் இடங்கள், கேட்வே ஆப் இந்தியா போன்ற இடங்களுக்கு சென்றனர்.
போராட்டக்காரர்களில் அதிகமானோர் கருப்பு டிசர்ட் அணிந்திருந்தனர். அவர்களிடம் எதையும் பேச முடியாத நிலையில் மும்பை போலீஸார் இருந்தனர். போராட்டம் நடைபெறும் இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் தேவையான வசதிகளை செய்து கொடுத்திருந்தது. அதோடு தற்காலிக கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் போராட்டக்காரர்கள் செல்பி எடுத்துக்கொண்டதோடு அவர்களையும் மராத்தா இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக கோஷமிட வைத்தனர். மராத்தா போராட்டக்காரர்கள் இன்று வரை போராட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.