
`வசனங்கள்’ மூலம் சினிமாவில் நுழைந்து நடிகர், இயக்குநர் என உயர்ந்து `சின்னப்பாப்பா பெரிய பாப்பா’, `பட்ஜெட் குடும்பம்’ முதலான தொடர்களை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 61.
வடசென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட சக்திவேல் வசனம் மூலம் சினிமாவில் நுழைந்தார். ‘கோல்மால்’ உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதினார். ’இவனுக்கு தண்ணியில கண்டம்’ படத்தை இயக்கினார்.
பிறகு சின்னத்திரைப் பக்கம் வந்தார். அங்கு இவர் இயக்கிய சின்னப்பாப்பா பெரிய பாப்பா பெரிய ஹிட் ஆனது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன் ஒளிபரப்பானது. தொடர்ந்து விகடன், ராடான் முதலான நிறுவனங்களுக்கு சில சீரியல் இயக்கினார்.
இன்னொருபுறம் திரைப்படங்களிலும் சின்னச் சின்னக் கேரக்டர்களில் நடித்து வந்தார். நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
தமிழ் தாண்டி தெலுங்கு தொலைக்காட்சி ஏரியாவிலும் இயங்கி வந்தார். `காஸ்ட்லி அல்லுடு’ அங்கு இவர் இயக்கிய ஹிட் ஆன தொடர்.

கடைசியாக தூர்தர்ஷனுக்கு விகடன் தயாரித்த பட்ஜெட் குடும்பம் தொடரை இயக்கினார். சில மாதங்களுக்கு முன் அந்த தொடர் முடிவடைய அடுத்த புராஜெக்டுக்குத் தயாராகி வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சிறுநீரகப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தவர், அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தாராம். சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை எடுத்திருக்கிறார். சிகிச்சை முடிந்து இரு தினங்களுக்கு முன்புதான் வீடு திரும்பினாராம். ஆனாலும் இன்று காலை மீண்டும் உடல் நிலை மோசமாகி உயிர் பிரிந்திருக்கிறது

இவரது மனைவி பெயர் இந்திரா. துர்கா, வர்ஷினி என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
சென்னை பாடியில் வைக்கப்பட்டிருக்கும் இவரது உடலுக்கு சினிமா, சின்னத்திரை பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை இவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.