
இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஞ்சித், “சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறோம். பொட்டு வைப்பதற்கு பிரச்னை, சாமி கும்பிடுவதற்கு பிரச்னை நிலவுகிறது.
நான் சங்கி தான்
என்னை சங்கி என்றும், சாதி வெறியன் என்றும் விமர்சிக்கிறார்கள். கலாசாரத்திற்காக என்னை அப்படி சொன்னால் நான் சங்கி தான்.” என்றவர் தவெக தலைவர் விஜய் குறித்து ஒருமையில் கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் ரஞ்சித், “விஜய் மதுரை மாநாட்டில் சொடக்கு போட்டு பிரதமரை குறிப்பிட்டு பேசுகிறார். 2014-ம் ஆண்டு கோவையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டி போல கையை கட்டி அமர்ந்திருந்ததை தம்பி மறந்துவிட்டார் போல.

இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் என்று பிரதமரை விமர்சிக்கும் விஜய், அன்று எந்த மக்கள் பிரச்னைக்காக மோடியை சந்தித்தார். அவரின் ‘தலைவா’ படம் ரிலீஸ் பிரச்னைக்காக தான் காத்திருந்தார்.
பிரதமரை ‘மிஸ்டர்’ என குறிப்பிடுகிறார். முதலமைச்சரை ‘அங்கிள்’ என்று பேசுகிறார். அவரின் மூளையில் ஏதோ பிரச்னை இருக்கிறது. உங்களுக்கு அறிவில்லையா. இதுதான் அரசியல் நாகரீகமா. உலகமே வியந்து பார்க்கும் பிரதமராக மோடி இருக்கிறார்.
அரசியலில் நல்லவர்களை சல்லடை போட்டு தேடும் நிலை உள்ளது. எனக்கும் வர கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும் போல் இருக்கிறது. அதை வாக்கால் குத்தி வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…