Doctor Vikatan: நாங்கள் இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்கள். நான் 40 வயது பெண். எனக்கு கருத்தடை ஊசிபோட்டு இருக்கிறார்கள். 18 வருடங்களாக குழந்தை பிறக்கவில்லை. எங்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை வேண்டும். அதற்கு சாத்தியம் இருக்கிறதா?
-Jothi basu, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
உங்கள் கேள்வியில் சில விஷயங்களில் தெளிவில்லை. 40 வயது என்கிறீர்கள், குழந்தை வேண்டும் என்கிறீர்கள், கருத்தடை ஊசி போட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். ஒன்றுக்கொன்று முரணாகத் தெரிகிறது.
உங்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்குமானால், முதலில் கருத்தடை முறைகளை நிறுத்த வேண்டும்.
கருத்தடை முறையை நிறுத்தினால்தான் ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு மீண்டும் நிகழும். அதன் பிறகு கருத்தரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகும். உங்கள் கணவரின் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை.
உங்களுக்கு 40 வயது என்பதால் ஒவேரியன் ரிசர்வ் எனப்படும் முட்டை இருப்பு குறைந்துகொண்டே வரும். அதை ‘ஏ.எம்.ஹெச்’ (Anti-Mullerian Hormone) எனப்படும் டெஸ்ட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அதை வைத்து உங்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக 35 வயதுக்குப் பிறகு இந்த முட்டைகளின் இருப்பு குறையத் தொடங்கும். 40 வயதில் அது இன்னும் குறைந்திருக்கும்.

18 வருடங்களாக உங்களுக்குக் குழந்தை இல்லை என குறிப்பிட்டுள்ளீர்கள். 18 வருடங்கள் என்பது நீண்டகாலம் என்பதால், உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் பரிசோதனைகள் அவசியம். ஹார்மோன் டெஸ்ட், ஸ்கேன், விந்தணுப் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை என எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இயற்கையான முறையில் குழந்தை பெறும் முயற்சிக்கு பதிலாக ஐவிஎஃப் சிகிச்சையை நீங்கள் நாடுவது சிறப்பு. உங்களுடைய வயது இந்த விஷயத்தில் தடையாக இருக்க வாய்ப்புள்ளதால், கருமுட்டைகளின் தரம் சோதிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் கருமுட்டை தானம் பெற வேண்டி வரலாம்.
எனவே, இனியும் தாமதிக்காமல் முதல் வேலையாக குழந்தையின்மை சிகிச்சை மருத்துவரை அணுகுங்கள். அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை உடனே செய்யுங்கள். இயற்கை முறையில் குழந்தைபெற முயற்சி செய்ய நினைத்து, இன்னும் சில வருடங்களை வீணடித்துவிட்டால், பிறகு ஐவிஎஃப் சிகிச்சையும் கைகொடுக்காமல் போகலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.