கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய “மதராஸி” படத்தின் புரமோஷன் நிகழ்விற்காக நேற்று வந்திருந்தார்.
மதியம் 3 மணிக்குத் தொடங்கிய இந்த மீட் அண்ட் க்ரீட் நிகழ்வில் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
முதலில் மேடையேறிய பாடகர் ஆதித்யா ஆர்.கே, ‘மதராஸி’ மற்றும் அதற்கு முன் ‘டான்’ படங்களில் பாட வாய்ப்பு வழங்கியதற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றியைத் தெரிவித்தார். பின்னர் மேடைக்கு வந்த நடிகை ருக்மிணி வசந்த், “இது என் இரண்டாவது தமிழ் படம். என்னை அன்புடன் ஏற்றுக்கொண்ட தமிழ் ரசிகர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. சிவகார்த்திகேயனின் ஊக்கம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது” எனக் கூறினார்.
அதன்பின் மேடைக்கு வந்த சிவகார்த்திகேயன், “மதராஸி படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு நான் அனிருத்துடன் மீண்டும் இணைந்துள்ளேன். வாழ்க்கையில் அன்பு ரொம்பவே முக்கியம். அதுபோல இந்தப் படமும் அன்பை மையமாகக் கொண்ட கதை” எனப் பேசினார்.
மேலும், “கல்லூரி காலத்தில் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களால்தான் இன்று நான் இந்த இடத்தில் இருக்கிறேன்” எனவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாகப் பதிலளித்த சிவகார்த்திகேயன், “அக்ஷன் சீன்களில் உடம்பு வலி ஏற்படும். லவ் காட்சிகள் மனதில் வலிக்க வைக்கும். ஆனால் எனக்கு மனதில் ஏற்படும் வலி பிடிக்கும்.
அதனால் லவ் சீன்ஸ் தான் பிடிக்கும்!” எனச் சிரிப்பூட்டியவர், “ஒரு மேஜிக் ரிமோட் கிடைத்தால் கல்லூரி நாட்களுக்கே திரும்பிப் போவேன். பின் வரிசையில் உட்கார்ந்து நண்பர்களோடு கிண்டல் செய்த நாட்களுக்கே போவேன்” என்று நினைவு கூர்ந்தார்.
“எனக்குப் பிடித்த நடிகர் எப்போதுமே நம் தலைவர் ரஜினிகாந்த்தான்” என்றவர், “பேர கேட்டாலே சும்மா அதிருதுல!” என்று சூப்பர் ஸ்டாரின் வசனத்தையும் மிமிக்ரி செய்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இயக்குநர்களில் பிடித்தவர்கள் குறித்தான கேள்விக்கு, “ஒருவரை மட்டும் சொல்ல முடியாது. ஒவ்வொரு படைப்பாளியும் எனக்குப் பிடித்தவர்கள்” எனத் தெரிவித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…