
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2013 முதல் 2015 வரை நட்சத்திர பவுலராக ஜொலித்தவர் மோஹித் சர்மா.
2015-க்குப் பிறகு பஞ்சாப், டெல்லி, மீண்டும் சென்னை என மாறி மாறி ஆடிய மோஹித், ஆரம்பத்தில் சென்னை அணியில் பந்துவீசியதைப் போல தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
ஆனால், திடீரென 2023, 2024 சீசன்களில் குஜராத் அணியில் கடும் பயிற்சியுடன் 40 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இருப்பினும், கடந்த சீசனில் டெல்லி அணியில் 8 போட்டிகளில் 2 விக்கெட்டுகள் மட்டும் வீழ்த்தி ஏமாற்றமளித்தார்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் லீக் தொடரில் கொல்கத்தாவுக்கெதிரான போட்டியொன்றில் தோனி தன்னைத் திட்டியதை நினைவுகூர்ந்திருக்கிறார்.
CricTracker ஸ்போர்ட்ஸ் ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய மோஹித் சர்மா, “மஹி பாய் அமைதியானவர். அவர் தனது அமைதியை இழப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். இளைஞரான உங்களிடம் தோனி தனது அமைதியை இழக்கும்போது நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். சாம்பியன்ஸ் லீக்கில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அப்படியான தருணம் எனக்கு ஒன்று உள்ளது.
அந்தப் போட்டியில், ஈஸ்வர் பாண்டேவை பந்து வீச மஹி பாய் அழைத்தார். ஆனால், அவர் என்னைத்தான் அழைக்கிறார் என்று நினைத்தேன். நான் வந்து விசவும் தயாரானேன்.
‘உன்னைப் பந்து வீச அழைக்கவில்லை’ என்று அவர் கூறினார். மேலும், ஈஸ்வர் பாண்டேவை அழைக்க முயன்றார். நான் பந்துவீச தொடங்கியதால், நான்தான் அதைத் தொடர வேண்டும் என்று நடுவர் கூறினார்.
அப்போது, அவர் தனது அமைதியை இழந்து என்னைத் திட்டினார். முதல் பந்திலேயே யூசுப் பதானின் விக்கெட்டை நான் எடுத்தேன்.
இருப்பினும், விக்கெட் எடுத்த கொண்டாட்டத்தின்போதும் அவர் என்னைத் திட்டிக் கொண்டே இருந்தார்” என்று சிரித்தவாறு கூறினார்.

அதேசமயம், “மைதானத்துக்கு வெளியே அவருடன் எனக்கு நிறையத் தருணங்கள் இருக்கின்றன. அவர் நிறைய விஷயங்களைக் கற்பிக்க விரும்புபவர்.
நீங்கள் அவருடன் இருக்கும் போது ஒவ்வொரு முறையும் விளையாட்டைப் பற்றி மட்டுமல்லாது வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்கிறீர்கள்.
கிரிக்கெட் எப்படி ஒரு கனிவான நபரை உருவாக்க முடியும் என்பதை அவர் கற்றுக் கொடுக்கிறார்” என்று மோஹித் சர்மா கூறினார்.