
மகாராஷ்டிராவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மராத்தா இன மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.
இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே இதற்கு முன்பு இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து தனது சொந்த கிராமத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அரசியல் கட்சிகளும், அரசும் தலையிட்டு இப்போராட்டத்தை விலக்கிக்கொள்ளும்படி செய்தன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்துத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் மனோஜ் ஜராங்கே கடந்த ஆண்டு மும்பையிலும் போராட்டம் நடத்தினார்.
இப்போராட்டங்கள் காரணமாக மாநில அரசு மராத்தா இன மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இருக்கிறது. மராத்தா இன மக்களை ஓ.பி.சி பிரிவில் சேர்த்து தனியாக 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மராத்தா சமுதாயத்தில் இருக்கும் அனைத்து பிரிவினரையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள கும்பி சமுதாயமாகக் கருதி சான்றிதழ் வழங்கவேண்டும் என்று மனோஜ் ஜராங்கே கோரி வருகிறார்.
இதையடுத்து மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக மனோஜ் ஜராங்கே மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார். மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதியிலிருந்து இதற்காக மும்பை நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்களில் மராத்தா இன மக்கள் மனோஜ் ஜராங்கே தலைமையில் மும்பைக்குள் வந்துள்ளனர்.
நேற்று இரவே அவர்கள் 2800 வாகனங்களில் நவிமும்பைக்குள் வந்தனர். அவர்கள் நவிமும்பையில் உள்ள ஏ.பி.எம்.சி மார்க்கெடில் தங்கினர். மும்பையில் பல நாட்கள் தங்கி இருந்து போராட்டம் நடத்த வசதியாக வாகனங்களில் 15 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், பாத்திரங்களுடன் வந்துள்ளனர். அவர்கள் இன்று காலையில் மும்பை ஆசாத் மைதானத்தில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
அங்கு ஒரு நாள் மட்டுமே போராட்டம் நடத்த மாநில அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. கடுமையான நிபந்தனைகளுடன் காலையிலிருந்து மாலை 6 மணி வரை போராட்டம் நடத்திக்கொள்ளலாம் என்று கூறி போலீஸார் அனுமதி வழங்கி இருக்கின்றனர்.
5000 பேர் போராட்டத்தில் பங்கேற்கலாம் என்றும், 5 வாகனங்கள் உள்ளே செல்லலாம் என்றும், போராட்டம் நடைபெறும் இடத்தில் சமையல் செய்யக்கூடாது என்று போலீஸார் நிபந்தனை விதித்துள்ளனர். ஆனால் இப்போராட்டத்தில் 20 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனோஜ் ஜராங்கே இன்று காலையில் ஆசாத் மைதானத்திற்கு வந்து உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

முன்னதாக அவர் ஆற்றிய உரையில், ”மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. அதனால்தான் மும்பைக்கு வந்திருக்கிறோம். இட ஒதுக்கீட்டுக்காக நான் சாவேன். ஆனால் அதிலிருந்து பின்வாங்கமாட்டேன். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை மும்பையிலிருந்து வெளியேற மாட்டோம். எங்களுக்குப் போராடுவதற்கான நேரத்தை நீட்டித்துக் கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழா மும்பையில் கோலாகலமாக நடந்து வரும் நிலையில் போராட்டம் நடத்துவதை மாநில அமைச்சர் ராதாகிருஷ்ணன் விகே பாட்டீல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ”அரசு எந்தச் சமுதாயத்திற்கும் அநீதி இழைக்காது. மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னைக்கு எங்களது அரசு ஏற்கனவே தீர்வு கண்டுவிட்டது. நாங்கள் இட ஒதுக்கீடு வழங்கியதை நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை இருக்கிறது.
அனைத்து ஜனநாயக போராட்டங்களையும் அரசு ஜனநாயக ரீதியில் கையாளும். மராத்தா போராட்டத்திற்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதில் அரசின் பங்கு எதுவும் இல்லை. மராத்தா சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவிட்ட நிலையில் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார்.
மராத்தா சமுதாயத்தினரின் போராட்டம் காரணமாக தென்மும்பையில் மும்பை மாநகராட்சி அலுவலகம் மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் கட்டிடம் இருக்கும் பகுதி மக்கள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்துக் காணப்பட்டது.