
இசையால் மனதை அமைதிப்படுத்தவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் முடியும் என்று பலரும் அறிந்திருப்போம். ஆனால் ஒரு இசை உணவின் சுவையைக் கூட மேம்படுத்தும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இசை நிபுணர்கள் இசையால் ஒரு உணவின் சுவையை உணரும் விகிதம் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசை நிபுணர் மருத்துவர் நடாலி ஹையாசிந்த், சாக்லேட்டின் சுவையை மேம்படுத்தும் ஒரு சிறப்பான பாடலை உருவாக்கியுள்ளார்.
அவரின் கூற்றுப்படி, சரியான இசை தாளங்கள், ஸ்வரங்கள் உணவுடன் இணைக்கப்படும் போது மூளை அந்த உணவை மிகவும் சுவையாகவும் வசீகரமாகவும் உணர வைக்கிறது என்று கூறுகிறார்.
ஒலிக்கும் சுவைக்கும் இடையேயான தொடர்பைக் கண்டறியப் பல ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார் நடாலி.
அதாவது மூளை பல உணர்வுகளின் ஒருங்கிணைப்பு என்ற செயல் முறையைப் பயன்படுத்துவதாக அவர் கூறியிருக்கிறார். இதனால் மூளை வெவ்வேறு உணர்வுகளை ஒன்றிணைந்து ஒரு ஆழமான அனுபவத்தைக் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு கேலக்ஸி சாக்லேட் நிறுவனம் மருத்துவர் நடாலியுடன் இணைந்து ஸ்வீடெஸ்ட் மெலடி என்ற தனித்துவமான பாடலை உருவாக்கியுள்ளது.
ஒன்பது வினாடிகள் உள்ள இந்தப் பாடல் சாக்லேட் வாயில் உருகுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்துடன் ஒத்துப் போவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
நடத்தப்பட்ட ஆய்வில் சாக்லேட்டின் மகிழ்ச்சி சுவையில் மட்டுமல்ல இசையுடன் அதனை அனுபவிக்கும் போது பன்முகத்தன்மை கொண்டதாக மாறுவதாகவும், சரியான இசை சாக்லேட்டை இன்னும் இனிப்பாக்குவதாக மூளை உணர்வதாகவும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.