• August 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர 28 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐ.ஐ.டியில் சேர்ந்தார்களா? திராவிட மாடல் அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா? இவை ஐஐடி பட்டப்படிப்பு என்ற வரம்பிற்குள் வராது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்

அன்பில் மகேஸ்

இதுபற்றிய விரிவான கடிதம் ஒன்றை அன்புமணி வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் ஐ.ஐ.டி என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் இணைந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார்.

திராவிட மாடல் அரசு முழுக்க முழுக்க பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறது என்பதற்கு அமைச்சரின் இந்த அறிவிப்புதான் எடுத்துக்காட்டு ஆகும்.

முதலில் இன்ப அதிர்ச்சி, ஆனால்!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் சேர்ந்திருப்பதாக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அதற்குக் காரணம் மாநிலப் பாடத்திட்டத்தைக் கடைபிடிக்கும் அரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் ஆகியவற்றிலிருந்து மொத்தமாகவே ஒவ்வொரு ஆண்டும் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் ஐஐடிகளில் சேர்ந்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் அரசுப் பள்ளிகளிலிருந்து 28 மாணவர்கள், அதுவும் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது இன்ப அதிர்ச்சியை அளித்தது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில், திமுக அரசு வெளியிட்டது திரிக்கப்பட்ட தகவல் என்பது உறுதியானதால் அந்த மகிழ்ச்சி மறைந்து போனது.

ஐஐடிகளுக்கான மாணவர் சேர்க்கை ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வு (முதன்மை), ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வு (உயர்நிலை) என இரு கட்டத் தேர்வுகளின் வாயிலாகத்தான் நடைபெறும். முதன்மைத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் முதல் 2 லட்சம் இடங்களைப் பிடிப்பவர்கள் உயர்நிலைத் தேர்வுகளுக்கு தகுதி பெறுவர்.

உயர்நிலைத் தேர்வுகளில் அதிக தரவரிசை பெற்றவர்களுக்கு ஐஐடிகளில் கலந்தாய்வு மூலம் பி.டெக் படிப்பில் சேர இடம் ஒதுக்கப்படும். இந்த முறையில் சேர்ந்தவர்கள்தான் ஐஐடி மாணவர்களாகக் கருதப்படுவர்.

IIT Madras

இவை ஐஐடி பட்டப்படிப்பு என்ற வரம்பிற்குள் வராது

ஆனால், தமிழக அரசால் குறிப்பிடப்படும் 28 மாணவர்களும் பி.டெக் படிப்பில் சேரவில்லை. அவர்களில் 4 மாணவர்கள் மட்டும் தான் உயர்நிலைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர்; மீதமுள்ள 24 மாணவர்களும் அந்தத் தேர்வுக்குக் கூட தகுதி பெறவில்லை. இந்த 28 மாணவர்களில் 25 பேர் சென்னை ஐஐடியால் தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் பி.எஸ் (டேட்டா சயின்ஸ்) படிப்பிலும், மீதமுள்ள 3 மாணவர்கள் பி.எஸ் (எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்) படிப்பிலும்தான் சேர்ந்துள்ளனர். இவை ஐஐடி பட்டப்படிப்பு என்ற வரம்பிற்குள் வராது.

பி.எஸ் (டேட்டா சயின்ஸ்), பி.எஸ் (எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்) ஆகிய படிப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுபவை ஆகும். அதற்கான பாடங்களை நடத்துவதற்காக தனியாக ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காணொலிகள் மூலமாகத் தான் இந்தப் படிப்புக்கான பாடங்கள் நடத்தப்படுகின்றன.

ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வு (உயர்நிலை)க்குத் தகுதி பெற்றவர்கள் நேரடியாகவும், மற்றவர்கள் சென்னை ஐஐடி நடத்தும் தனி நுழைவுத்தேர்வின் வாயிலாகவும் இப்படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தனி நுழைவுத் தேர்வில் பட்டியலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் 30%, ஓபிசி பிரிவினர் 35%, பொதுப்பிரிவினர் 40% மதிப்பெண் எடுத்தாலே இந்தப் படிப்பில் எளிதாகச் சேர்ந்து விட முடியும்.

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் இந்தப் படிப்புக்குத் தகுதி பெற முடியும் என்ற கட்டாயம் இல்லை. 11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே இப்படிப்புக்கான நுழைவுத்தேர்வை எழுதி தகுதி பெற முடியும். அவ்வாறு தகுதி பெற்றவர்கள் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் பி.எஸ். படிப்புகளில் சேர்ந்து கொள்ள முடியும்.

இப்போதும் கூட தமிழக அரசால் குறிப்பிடப்படும் 28 மாணவர்களில் 14 பேர் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்தான். அவர்கள் இப்போது தான் 11-ஆம் வகுப்பை முடித்து 12-ஆம் வகுப்புக்குச் சென்றுள்ளனர்.

 அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

சாதாரணப் படிப்பில் மாணவர்களை சேர்த்திருக்கின்றனர்

ஐஐடிகள் மூலம் வழங்கப்படும் பி.டெக் படிப்பில் சேர பல்வேறு நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பி.எஸ் படிப்புக்கு அத்தகைய நிபந்தனைகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது. உலகின் எந்த மூலையில் வாழ்பவர்களும், 17 முதல் 81 வயது வரையிலான அனைத்து வயதுப் பிரிவினரும் இந்தப் படிப்பில் சேர முடியும்.

இன்றைய நிலையில் சென்னை ஐஐடியில் மட்டும் பி.எஸ் படிப்பில் மொத்தம் 36 ஆயிரம் பேர் சேர்ந்து படித்து வருகின்றனர். அவர்களின் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு ஏதேனும் ஒரு படிப்பை, வேறு ஒரு கல்லூரியில் முழு நேரமாகப் படித்துக் கொண்டு, இந்தப் படிப்பை பகுதிநேரமாக பகுதி நேரமாகப் படித்து வருகின்றனர்.

3000-க்கும் மேற்பட்டோர் பணி செய்து கொண்டே இந்தப் படிப்பைப் படித்து வருகின்றனர். இத்தகைய சாதாரணப் படிப்பில் சேர்ந்த மாணவர்களைத்தான் சென்னை ஐஐடியின் வழக்கமான படிப்புகளில் சேர்ந்து விட்டதைப் போன்று மாயத் தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயல்கிறது.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், பி.எஸ் (டேட்டா சயின்ஸ்), பி.எஸ் (எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்) ஆகியவை புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படுபவை ஆகும். இப்படிப்பில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம்; எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். அவர்கள் எத்தனை ஆண்டுகள் படித்தார்கள் என்பதைப் பொறுத்து சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திமுக அரசே திணிக்கிறது

இத்தகைய கல்வி முறை இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யும் என்று கூறி, புதிய கல்விக் கொள்கையை திமுக கடுமையாக எதிர்த்தது. இப்போது அதே கொள்கையின்படி நடத்தப்படும் படிப்பில் மாணவர்களை அரசே திணிக்கிறது. திமுகவின் இரட்டை வேடம் எப்படியிருக்கும் என்பதற்கு இது தான் மிகச்சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.

அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது போன்ற பொய்யான தகவல்களைப் பரப்புவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டு மக்களை இத்தகைய செய்திகள் மூலம் ஏமாற்ற முடியாது. பொய்களை பரப்பும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *