
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் 17 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். அங்குள்ள உதைப்பூர் மாவட்டத்தில் இருக்கும் லிலாவாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம். இவரது மனைவி ரேகா(55). இத்தம்பதிகளுக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 4 ஆண் குழந்தை உட்பட 5 குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிட்டன்.
எஞ்சிய அனைத்து குழந்தைகளும் இருக்கின்றன. இந்நிலையில் ரேகா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு ஜதோல் ஆரம்பச் சுகாதார மையத்தில் 17வது குழந்தை பிறந்திருக்கிறது. இது அவர்களின் கிராமத்தில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ரேகாவின் இரண்டு மகன்கள் மற்றும் 3 மகளுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ரேகாவிற்குப் பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டன. அப்படி இருந்தும் ரேகா குழந்தை பெற்றுக்கொள்வதைக் கைவிடவில்லை. ரேகாவின் கணவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.
போதிய வருமானம் இல்லாத காரணத்தால் தனக்குப் பிறந்துள்ள எந்தக் குழந்தையையும் படிக்க வைக்கவில்லை. தனது பிள்ளைகளுக்குக் கூட கடன் வாங்கித்தான் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை நிறுத்தவில்லை.
ரேகாவிற்குப் பிரசவம் பார்த்த மருத்துவர் ரோஷன் இது குறித்துக் கூறுகையில், ”பிரசவத்திற்கு வந்தபோது தன்னிடம் இது 4வது குழந்தை என்று தெரிவித்தார். ஆனால் அதன் பிறகுதான் அவருக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்துள்ளது என்று தெரிய வந்தது. அதிகப்படியான பிரசவம் காரணமாக அவரது கர்ப்பப்பை மிகவும் பலவீனம் அடைந்துள்ளது.
அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படவும், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இது குறித்து ரேகாவின் மகள் ஷீலா கூறுகையில், ”நாங்கள் ஏற்கனவே கடுமையான கஷ்டத்தில் இருக்கிறோம். எனது அம்மாவிற்கு அதிகப்படியான குழந்தைகள் இருப்பதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்” என்றார்.
ரேகாவின் கணவர் ராம் இது குறித்துக் கூறுகையில், ”எங்களுக்குச் சொந்த வீடு கூட கிடையாது. அன்றாட செலவுகளைச் சமாளிக்கவே சிரமப்படுகிறேன். குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுக்க 20 சதவீத வட்டிக்குக் கடன் வாங்குகிறேன். பல லட்சத்தைத் திரும்பக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் கடனை முழுமையாக அடைக்கமுடியவில்லை” என்று தெரிவித்தார்.