
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆகஸ்ட் 29) மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து வட்டார பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் பங்கேற்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் தொடரும் வனவிலங்குகள் மனித மோதல் தொடர்பாக விவசாயிகள் மண்டியிட்டு மனு அளித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
தென்காசியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள், காட்டு யானைகள் உள்ளிட்டவற்றின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுவதாகவும், வனவிலங்குகள் பயிர்களைச் சேதப்படுத்துவதால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக வனத்துறையிடம் முறையிட்டாலும் வனத்துறையினர் வனவிலங்குகளுடன் வாழப் பழகிக் கொள்ளுமாறு அலட்சியமாகப் பேசுகின்றனர் என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இதனைக் கண்டிக்கும் விதமாக தங்களது குடும்ப அட்டையில் வனவிலங்குகளையும் சேர்க்க வேண்டும் எனக் கோரும் விதமாகத் தட்டில் குடும்ப அட்டையை வைத்து மண்டியிட்டு மனு அளித்துள்ளனர். மேலும் பழைய குற்றால அருவியில் அத்துமீறிக் குளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முறையிட்ட விவசாயிகள் மீது வனத்துறையும், காவல்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டிக்கும் விதமாக விவசாயிகள் கை விலங்கோடு வருகை தந்ததும் பரபரப்பு ஏற்படுத்தியது. இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியதுடன் இன்று வேண்டுமென்றே மாவட்ட ஆட்சியரும், வனத்துறை அலுவலரும் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டதாகக் கூறி விவசாய கோஷங்கள் எழுப்பி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினார்.