
மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அருண் காவ்லி கடந்த 2007ம் ஆண்டு சிவசேனா கவுன்சிலர் கம்லாகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கடந்த 2012ம் ஆண்டு இக்கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து அருண் காவ்லி நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடிக்கடி பரோலில் வெளியில் வந்து கொண்டிருந்த அருண் காவ்லி தனது தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார். ஆனால் மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தது.
இதையடுத்து தன்னை ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி அருண் காவ்லி கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை நீதிபதிகள் சுதந்து மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. இதையடுத்து இதை எதிர்த்து அதே சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் அருண் காவ்லிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஏற்கனவே அருண் காவ்லி 17 ஆண்டுகள் சிறையில் இருந்து இருப்பதையும், அவரது மேல் முறையீட்டு மனு இன்னும் விசாரிக்கப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர். இதையடுத்து அருண் காவ்லி 17 ஆண்டு சிறை வாசத்திற்கு பிறகு நாக்பூர் சிறையில் இருந்து வெளியாக இருக்கிறார்.
சிறையில் இருந்து வெளியில் வர ஒரு வாரம் பிடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.வான அருண் காவ்லி இதற்கு முன்பு தனது 17 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் 15 முறை பரோலில் வந்து இருக்கிறார்.
நாக்பூர் சிறையில் அவருக்கு பாதுகாப்பு கருதி தனி அறையை ஒதுக்கி இருந்தனர். சிறையில் எந்த வித சர்ச்சையிலும் சிக்காமல் அமைதியான முறையில் வாழ்ந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக அருண் காவ்லி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மாநில அரசின் 2006வது ஆண்டு சட்டப்படி கைதிகளை முன்கூட்டிய விடுவிக்க முடியும் என்ற உத்தரவின் அடிப்படையில் தன்னை சிறையில் இருந்துவிடுவிக்கவேண்டும் என்று அதில் கோரி இருந்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அருண் காவ்லியை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று தெரிவித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு ஒன்றையும் தாக்கல் செய்து இருந்தது. அதில் உயர் நீதிமன்றம் யாரையும் விடுதலை செய்யலாம் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றும், யாரை விடுவிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்குறியது என்று குறிப்பிட்டு இருந்தது.

மும்பையில் 1990களில் மாஃபியாவாக செயல்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுவிட்டனர். தற்போது மும்பையில் பெரும்பாலான மாஃபியா கூட்டம் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது. அருண் காவலி, சோட்டாராஜன் போன்ற ஒரு சில மாஃபியா தலைவர்கள் மட்டும் சிறைக்குள் இருந்தனர். தற்போது அருண் காவ்லி சிறையில் இருந்து வெளியில் வருகிறார். சோட்டாராஜன் மத்திய அரசின் பாதுகாப்பில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மும்பை மாநகராட்சிக்கு ஓரிரு மாதத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அருண் காவ்லியின் விடுதலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.