• August 29, 2025
  • NewsEditor
  • 0

பொதுவாக குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதை பார்த்திருக்கிறோம்.

ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வந்த ஒருவரிடமிருந்து பணத்தை எடுத்து விட்டு குரங்கு ஓடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஒரு அசாதாரண நிகழ்வு நடந்துள்ளது. அதாவது, அனுஜ் என்ற ஒருவர் நிலப்பதிவு விஷயத்திற்காக 80,000 ரூபாய் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.

அந்தப் பணத்தை பைக்கின் பெட்டியில் வைத்துவிட்டு, அலுவலகத்தில் நிலப்பதிவு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

பைக் பெட்டியை திறந்து ரூ.80,000 பணத்தை எடுத்த குரங்கு

அலுவலகத்தில் உள்ளே அவர்கள் மும்மூரமாக பேசிக் கொண்டிருந்த சமயத்தில், குரங்கு வாகனத்தின் பெட்டியைத் திறந்து பணப்பையை எடுத்தது.

பின்னர் அருகிலிருந்த மரத்தின் கிளைகளில் ஏறி பையை திறந்து பார்த்த குரங்குக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சாப்பிட ஒன்றும் இல்லை, பணக்கட்டு மட்டுமே இருந்ததால் விரக்தியில் ரூபாய் நோட்டுகளை கிழித்து கீழே வீசத் தொடங்கியது.

அதை சுற்றி இருந்த மக்கள் பார்த்து, `பணத்தை கீழே போடு’ என்று கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட குரங்கு எல்லாத் திசைக்கும் ஓடி, கிளையில் தாவியது. இறுதியில் ஒரு வழியாக கையில் இருந்த பணத்தை கீழே வீசிவிட்டு சென்றது.

ஒரு வழியாக கிடைத்த பணத்தை மீட்டனர். 80 ஆயிரம் ரூபாய் பணத்தில், 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது. மீதமுள்ள பணம் குரங்கால் கிழிக்கப்பட்டதால் பயன்படுத்த முடியாமல் போனது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறுகையில்: “எங்களால் வளாகத்தில் அமர்ந்து உணவுக் கூட சாப்பிட முடியவில்லை. சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலே குரங்குகள் உடனடியாக தாக்கி, பொருள்களை பறித்துச் செல்கின்றன” என்று கவலையுடன் கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *