• August 29, 2025
  • NewsEditor
  • 0

எடப்பாடி பழனிசாமி மதுரை பிரசாரப் பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து 4 நாட்களுக்கு மதுரையில் பிரசார பயணம் செய்ய உள்ளார்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கான அழைப்பிதழை வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

அவருடன் முன்னாள் அமைச்சர் வளர்மதியும் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள வணிக வளாகங்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கி அழைப்பு விடுத்தார்.

செல்லூர் ராஜூ

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ பேசுகையில்,

“மதுரையில் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அரசியல் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக மதுரை ஆளும் மீனாட்சி அம்மன் கோவிலில் மங்கையர்கன்னி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு அழைப்பிதழ்களை வழங்கி சாமி தரிசனம் செய்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது மதுரை மாவட்டத்திற்கு 8,000 கோடிக்கு மேல் திட்டங்களை வழங்கி இருக்கிறார்.

மதுரையில் முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரம் குடிநீர் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் இந்த பிரச்சார பயணத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள்” என்றார்.

இரண்டு அமைச்சர்கள்

மேலும் செல்லூர் ராஜூ பேசுகையில், “மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்களால் எந்தப் பயனும் இல்லை.

அமைச்சர் மூர்த்தி மேற்குத் தொகுதியில் டிபன் கேரியர்களை கொடுத்து வருகிறார். ஒரு அமைச்சருக்கு இதுதான் வேலையா என்று பொதுமக்கள் பேசுகிறார்கள்.

இன்னொரு அமைச்சர் தனது பதவி இறக்கப்பட்டதால் அமைதியாகி விட்டார். அவர் வரும் தேர்தலில் போட்டியிடுவாரா? மாட்டாரா என்பதே தெரியவில்லை.

மாநகராட்சியில் நடந்த சொத்து வரி மோசடியை இரண்டு அமைச்சர்களும் கண்காணிக்கவில்லை. அவர்கள் மாதந்தோறும் ஆய்வுக்கூட்டத்தை நடத்தியிருந்தால் இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை. மாநகராட்சியில் வரி முறைகேடு நடந்ததற்கு இரண்டு அமைச்சர்களும் தான் காரணம்.

செல்லூர் ராஜூ

மாநகராட்சி வரி முறைகேடு

மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மட்டுமே முழுமையாக போராடியது. மனைவி மேயர் பதவியில் இருந்ததால் பொன் வசந்த் நிழல் மேயராக இருந்து வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி வரி முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மேயர் இந்திராணி பதவி விலக வேண்டும். ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்த பொன் வசந்தின் மனைவி இந்திராணி மேயராக தொடரலாமா? அவர் பதவி விலகும் வரை அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க மாட்டார்கள்.

மதுரை மாநகராட்சியில் ஊழல் பெருக்கெடுத்துள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பின்னோக்கி சென்றுள்ளது.

மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டில் 28 கோடியே 21 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவியை விட்டு விலகியபின் அவரிடம் விசாரிப்பதுதான் முறையான விசாரணையாக இருக்கும்.

அதிமுக

ஆர்எஸ்எஸ் வலிமை பெறுவதற்கு அதிமுக துணை போவது கவலை அளிப்பதாக பேசியுள்ள திருமாவளவன் தற்போது காட்டுக்குள் சிக்கிக் கொண்டு திசை தெரியாமல் நிற்கிறார்.

அதிமுக தனது கொள்கையில் இருந்து என்றும் வழுவாது, தவறாது; அது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் யாருக்கும் எஜமானர் இல்லை. அடிமையும் இல்லை” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *