
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
திருமணத்திற்குப் பின் தான் முதன் முதலாக சென்னை மண்ணை மிதித்தேன். கிராமத்துக் கட்டுப்பாடுகளோடு கவிதையும்,கனவுகளுமாய் வளர்ந்தவள் நான். என் கணவரோ எனக்கு முழு சுதந்திரம் தந்தார். இரு சக்கர வாகனத்தில் இருவருமாய் சென்னையைச் சுற்றி வருவோம். இரு சக்கர வாகனப் பயணமே எனக்கு முதல் அனுபவம் எனில் நான் எப்படி வளர்ந்திருப்பேன் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். தொண்ணூறுகளின் தொடக்கம் அது.
ஹோட்டல் காஞ்சியில் திருமண வரவேற்பு என்பது நான் வாய் பிளந்த அனுபவம். மெரினா பீச்சும், மவுண்ட் ரோடு வாகன நெரிசலும், பதினான்கு மாடி கட்டிடமும்,கன்னிமாரா நூலகமும் என்னை வியக்க வைத்த சமாச்சாரங்கள். வடபழனி ஹோட்டல் சரவணபவனில் எங்கள் முதல் ஸ்வீட் பாஸந்தி.
ஒரு நாள் என்னவர் என்னிடம் ” நீ சென்னையில் பார்க்க விரும்பும் இடம் எது?” என்று கேட்டார்.
எனது நெடுநாள் ஆசை. அந்த காலத்தில் கிராமத்தில் வளர்ந்த பெண். தயங்கியபடி சொன்னேன். கவிஞர் வைரமுத்துவை சந்திக்க வேண்டும் என்று.
திருவாரூர் பக்கத்தில் என் ஊர். ஆசிரியையாக வேலை பார்த்த நான் ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் கலைஞர் பதிப்பகத்திற்கு மணி ஆர்டர் செய்து கவிஞர் வைரமுத்துவின் புத்தகம் ஒன்று வாங்குவேன். இப்பொழுது நினைத்தவுடன் நினைத்த விலைக்கு புத்தகங்கள் வாங்க முடியும். ஆனால் அந்த கால கட்டத்தில் பத்து ரூபாய்க்கோ,இருபது ரூபாய்க்கோ வாங்கிய அந்த புத்தகங்கள் எனக்கு வழங்கிய பூரிப்பு இருக்கிறதே அது கோடி ரூபாய் கொடுத்தாலும் வராது. சரி, சரி கவிஞர் வைரமுத்துவை சந்திக்க நினைத்த நிகழ்வுக்கு வருவோம்.
இருவரும் கிளம்பி கவிஞர் வீட்டிற்குச் சென்றோம். ஆனால் கவிஞர் வீட்டில் இல்லை. கவிதாயினி பொன்மணி வைரமுத்து அவர்களிடம் பேசியது ஆனந்த அனுபவம். அவர் அளித்த பாலும்,நெருக்கத் தொடுத்த மல்லிகைச் சரமும் இன்றும் மணக்கிறது.
கவிஞரின் கேடயங்கள்,பரிசுகள்,புத்தகங்கள் அனைத்தையும் வரவேற்பறையில் பார்த்து மலைத்தது கவிஞரை சந்திக்க முடியாமல் போன ஏமாற்றத்தை ஓரளவு ஈடு செய்தது. பின் நாளில் எங்கள் பள்ளிக்கு அவர் வருகை தந்ததும், அவரது கவிதை நூல்களைக் கொண்டே அவர் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கியதும்,கவிஞர் என்னைப் பாராட்டியதும் என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வு.
அன்று தொடங்கி இன்று வரை சென்னையில் நிகழும் வளர்ச்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் மென்கணினித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியால் நிகழும் மாற்றங்களும், புதிது புதிதாய் எழும்பும் கட்டிடங்களும் ,சாலைகளும் நவீன தொழில் நுட்ப மாற்றங்களாய் திகைக்க வைக்கின்றன. கலாச்சார மாற்றங்கள்…….?
அன்றைய மலைப்பு இன்றும் தொடர ரசிக்கிறேன் சென்னையை. என் ரசனை அறிந்து நிறைவேற்றித் தந்த என் கணவர் இன்று இல்லை.
அவரோடான என் நிகழ்வுகளைப் பறித்த காலம் என் நினைவுகளை என்ன செய்ய முடியும்?
-வசந்தா பாரி.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!