
வேலூர்: ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறை தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பாக்கியுள்ள 24 காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பத்தூர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை அறிவித்தது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி மனைவி பவித்ரா என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி காணாமல் போனதாகவும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என அவரது கணவர் பழனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, பள்ளிகொண்டா காவல் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த ஷமில் அகமது (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.