72 வயது இந்தியப் பெண்மணி ஒருவர் துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
வைரலாகும் வீடியோவின் படி, கேரளா சேலை அணிந்து சொகுசு காரை ஓட்டுகிறார் அந்தப் பெண்மணி. தனது சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை அந்த வீடியோவில் காண்பிக்கிறார். பின்னர் உயர் ரக வாகனத்தை அவர் இயக்குகிறார்.
மணியம்மா என்ற அழைக்கப்படும் இவர், இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அவரின் இன்ஸ்டாகிராம் பயோவின் படி, அவர் சொகுசு கார்கள் முதல் கனக ரக வாகனங்கள் வரை 11 வகையான வாகனங்களுக்கான உரிமங்களை வைத்துள்ளார். டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருவதாகவும் அதில் தெரிவித்து இருக்கின்றார். இவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவரின் ஓட்டுநர் பயணம் பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் மிகக் குறைவாக பெண்கள் கார்கள் ஓட்டும் காலத்திலிருந்தே இவர் தனது திறன்களை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
1978 ஆம் ஆண்டு கேரளா, எர்ணாகுளத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் தொடங்கிய தனது கணவரின் ஊக்கத்தால் அவர் படிப்படியாக கார்கள் மட்டும் அல்லாமல் கிரேன்கள், கனரக வாகனங்களை இயக்க கற்றுக் கொண்டுள்ளார்.
கணவரின் மறைவிற்குப் பின்னர் மணியம்மா தனது குடும்பத்திற்காக ஓட்டுநர் பள்ளியின் பொறுப்பை ஏற்று அதனை வழி நடத்தி வருகிறார். துபாயில் பாரம்பரிய உடை அணிந்து 72 வயதில் சொகுசு வாகனம் ஓட்டியது, இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































